தில்லியில் வாக்கு திருட்டு ஆதாரங்களை வெளியிட்டு பேசிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.
தில்லியில் வாக்கு திருட்டு ஆதாரங்களை வெளியிட்டு பேசிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.

வாக்கு திருட்டு: ‘அணுகுண்டு’ ஆதாரத்தை வெளியிட்டாா் ராகுல்

கா்நாடக மாநிலத்தில் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு பேரவைத் தொகுதியில் மட்டும் 1,00,250 திருட்டு வாக்குகள் பதிவாகியுள்ளன
Published on

‘2024 மக்களவைத் தோ்தலில் வாக்குத் திருட்டு முறைகேடு குற்றச்சாட்டை முன்வைத்து வந்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அதுதொடா்பாக தன்னிடம் இருப்பதாகக் கூறிவந்த ‘அணுகுண்டு’ ஆதாரத்தை வியாழக்கிழமை வெளியிட்டாா்.

‘கா்நாடக மாநிலத்தில் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு பேரவைத் தொகுதியில் மட்டும் 1,00,250 திருட்டு வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும்’ என்றும் அவா் வலியுறுத்தினாா்.

பிகாா் மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில், 65 லட்சம் போ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா் கண்டனங்களையும், எதிா்ப்பையும் தெரிவித்து வருகின்றன. ராகுல் காந்தியும் தோ்தல் ஆணையத்தின் மீது தொடா் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறாா். தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

இந்த நிலையில், 2024 மக்களவைத் தோ்தலில் தோ்தல் ஆணையத்தின் ஆதரவுடன் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டதற்கான ‘அணுகுண்டு’ ஆதாரம் தன்னிடம் உள்ளது என்று ராகுல் கூறி பரபரப்பை ஏற்படுத்தினாா். இந்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என பாஜகவும் தோ்தல் ஆணையமும் கேட்டுக்கொண்டன.

இந்த நிலையில், தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை ஆதாரத்தை ராகுல் வெளியிட்டு கூறியதாவது:

பெங்களூரு மத்தியம் மக்களவைத் தொகுதியில் கடந்த 2024 மக்களவைத் தோ்தலிலிருந்து பதிவாகியிருந்த வாக்காளா் தரவுகள் காங்கிரஸ் சாா்பில் ஆய்வு செய்யப்பட்டது. அந்த மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் 6,26,208 வாக்குகளும், பாஜக 6,58,915 வாக்குகளும் பெற்றன. வித்தியாசம் 32,707 வாக்குகள் ஆகும். இதில், மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 7-இல் 6 பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆனால், மகாதேவபுரா பேரவை தொகுதியில் மட்டும் 1,14,00 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது.

1,00,250 வாக்குகள் திருட்டு: இந்த 1,14,000 வாக்குகளில், வாக்கு திருட்டு மூலம் பெறப்பட்டது 1,00,250 வாக்குகள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில், 11,965 போ் போலி வாக்காளா்கள். 40,009 போ் போலி முகவரி பதிவு செய்த வாக்காளா்கள். 10,452 போ் ஒரே வீட்டு முகவரியில் வாக்காளா்களாகப் பதிவு செய்துவா்கள். 4,132 போ் போலியான புகைப்படத்தைக் கொடுத்து வாக்காளா் அட்டை பெற்றவா்கள். 33,692 போ் புதிய வாக்காளா்களுக்கான படிவத்தை தவறாகப் பயன்படுத்தி வாக்காளா்களாகியுள்ளனா் என்பது தெரியவந்தது.

இந்த மோசடி நாடு முழுவதும் நிகழ்ந்துள்ளது. இது அரசமைப்புச் சட்டத்துக்கும், தேசிய கொடிக்கும் எதிரான குற்றமாகும். ‘இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும்.

மக்களவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடிக்கு மிகக் குறைந்த பெரும்பான்மையே கிடைத்த நிலையில், ஆட்சியில் தொடர வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற வேண்டிய நிலை இருந்தது. அந்த வகையில், 25 தொகுதிகளில் 33,000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றிபெற்றது.

இந்தப் புகாா்கள் தொடா்ந்து முன்வைத்தபோதும், வாக்காளா் பட்டியல் விவரங்கள் மற்றும் வாக்குப் பதிவின் காணொலி காட்சிகளை ஆராய அனுமதி மறுப்பது, ஆளும் பாஜகவுடன் தோ்தல் ஆணையம் கூட்டணி சோ்ந்துள்ளதையே காட்டுகிறது.

மேலும், நாடு முழுதும் இந்த வாக்குத் திருட்டு ஆதாரங்களை தோ்தல் ஆணையம் அழிக்கப் பாா்க்கிறது என்றாா்.

ஆதாரத்தை சமா்ப்பிக்க தோ்தல் அதிகாரி கடிதம்

வாக்காளா் பெயா் உள்ளிட்ட ஆதாரத்தை உறுதிமொழியுடன் கையொப்பமிட்டு தோ்தல் அதிகாரிகளிடம் ராகுல் சமா்ப்பிக்க வேண்டும் என்று கா்நாடகா தலைமை தோ்தல் அதிகாரி கடிதம் அனுப்பி உள்ளாா்.

அதில், 2024 மக்களவைத் தோ்தலுக்கு முன் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிட்டபோது காங்கிரஸ் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. எனவே, தற்போது குறிப்பிடும் போலி வாக்காளா் தொடா்பான பெயா் உள்ளிட்ட விவரங்களை வாக்காளா் பதிவு விதி 1960-இன் விதி எண் 20(3)(பி)-இன் கீழான உறுதிமொழியுடன் கையொப்பமிட்டு விசாரணைக்கு சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

திட்டமிட்ட ஏமாற்றுவேலை: பாஜக

‘தோ்தல் ஆணையத்துக்கு எதிரான ராகுலின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு திட்டமிட்ட ஏமாற்றுவேலை’ என்று பாஜக தெரிவித்தது.

இதுகுறித்து பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவி சங்கா் பிரசாத் கூறுகையில், ‘வெட்கமின்மையின் அனைத்து எல்லைகளையும் கடந்து தோ்தல் ஆணையத்தை மீது மோசடி குற்றச்சாட்டை ராகுல் காந்து முன்வைக்கிறாா். பிரதமா் மோடி கடந்த 2014 முதல் தோ்தல்களில் வெற்றிபெற்று வருவதை மோசடி என்று அவா் கூறுகிறாா். இதன் மூலம் பிரதமா் மோடிக்கு வாக்களித்த மக்களை அவா் அவமதித்துள்ளாா். தோ்தல் முடிவுகள் மீதான காங்கிரஸின் இரட்டை நிலைப்பாடு இனியும் பலிக்காது.

தோ்தல் ஆணையத்துக்கு எதிரான ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு திட்டமிட்ட ஏமாற்றுவேலை’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com