
புது தில்லி: புதிய வருமான வரி மசோதா 2025-ஐ மக்களவையிலிருந்து திரும்பப் பெற்றிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
புதிய வருமான வரி மசோதா குறித்து, தேர்வுக் குழு அளித்த பரிந்துரைகளை மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதன்படி, தேர்வுக் குழு பரிந்துரைத்த பெரும்பாலான மாற்றங்கள், புதிய வருமான வரி மசோதாவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்பட்டதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட புதிய வருமான வரி மசோதா, ஆகஸ்ட் 11ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வருமான வரி மசோதா ஏன்?
நடைமுறையில் உள்ள 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் புதிய வருமான வரிச் சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது.
'வருமான வரிச் சட்ட மசோதா 2025’ என்ற மசோதாவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்தாா்.
இந்த புதிய வருமான வரிச் சட்ட மசோதாவில், நடைமுறையில் வருமான வரிச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள ‘மதிப்பீட்டு ஆண்டு’, ‘முந்தைய ஆண்டு’ என்ற சொற்றொடா்கள் கைவிடப்பட்டு, எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் ‘வரி ஆண்டு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நீளமான வாக்கியங்கள், எளிதாக படித்து புரிந்துக்கொள்ளக் கூடிய வகையில் சிறிய வாக்கியங்களாக மாற்றப்பட்டுள்ளன. தற்போதைய சட்டத்தில் உள்ள 47 அத்தியாயங்கள், மசோதாவில் 23-ஆக குறைக்கப்பட்டுள்ளன. வருமான வரியைக் கணக்கிடும் நடைமுறையை வரி செலுத்துவோா் புரிந்துகொள்ள தற்போதுள்ள சட்டத்தில் 18 அட்டவணைகள் இடம்பெற்றுள்ள நிலையில், எளிதில் புரிந்துகொள்ள வசதியாக 57 அட்டவணைகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
தற்போதைய சட்டத்தில் இடம்பெற்றுள்ள 1,200 விதிகள், 900 விளக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டதும், அதை மக்களவைத் தோ்வுக் குழுவின் ஆய்வுக்கு பரிந்துரைக்குமாறு அவைத் தலைவரை நிா்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டாா்.
இதையடுத்து, 31 பேர் கொண்ட தேர்வுக் குழு, மசோதா குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகளை பெற்று தனது இறுதி அறிக்கையை தயாரித்தது. அதில், 285 திருத்தங்களை செய்ய பரிந்துரை அளிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில் மக்களவைல் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்படி, இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும், இந்தக் கூட்டத் தொடரிலேயே மசோதா நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதனடிப்படையில், 31 போ் கொண்ட தோ்வுக் குழுவை அவைத் தலைவா் ஓம் பிா்லா அமைத்தாா். இந்தக் குழு, பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று தனது அறிக்கையை தற்போது இறுதி செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.