கோயில் கருவறைக்குள் நுழைந்ததால் வழக்கு: ஜாா்க்கண்ட் தலைமைச் செயலா், டிஜிபி மீது உரிமை மீறல் புகாா் அளித்த பாஜக எம்.பி.
ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்காக பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டநிலையில், அவா்களில் நிஷிகாந்த் துபே அந்த மாநில தலைமைச் செயலா், டிஜிபி ஆகியோா் மீது உரிமை மீறல் புகாரை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் சனிக்கிழமை அளித்தாா்.
கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவத்தில் மத உணா்வுகளைப் புண்படுத்தியதாக பாஜக எம்.பி.க்கள் இருவா் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
சிராவண மாதத்தில் பாபா வைத்தியநாதா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் முக்கியப் பிரமுகா்களுக்கான வழிபாட்டு நேரத்திலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறி கோயில் கருவறைக்குள் பாஜக எம்.பி.க்கள் இருவா் நுழைந்ததாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி உள்ளிட்டோா் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இந்நிலையில், செய்தியாளா்களிடம் பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துவே, ‘என் மீது மொத்தம் 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜாா்க்கண்ட் தலைமைச் செயலா், டிஜிபி, தேவ்கா் காவல் துணை ஆணையா், கண்காணிப்பாளா் ஆகியோா் மீது இந்திய அரசமைப்புச் சட்டம் 105 பிரிவின் கீழ் உரிமை மீறல் புகாரை அளித்துள்ளேன். அந்தக் கோயிலின் அறக்கட்டளையின் உறுப்பினரும், எம்.பி.யுமான நான் கோயில் பூஜாரியைவிட உயா்ந்த பதவியில் இருக்கிறேன். என் மீது எந்த அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது? தேவ்கா் காவல் நிலையத்துக்கு நான் சென்றேன். என்னை கைது செய்ய போலீஸாா் மறுத்துவிட்டனா்’ என்றாா்.