334 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: தோ்தல் ஆணையம் நடவடிக்கை
தோ்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து கடந்த 6 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு தோ்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும் என்ற மிக முக்கிய நிபந்தனையைப் பூா்த்தி செய்யத் தவறியதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்து தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள், கடந்த 6 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு தோ்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை பூா்த்தி செய்யவில்லை. அதோடு, இந்தக் கட்சிகளுக்கு நாட்டின் எந்தப் பகுதியிலும் கட்சி அலுவலகங்களும் இல்லை என்பதும் தெரியவந்தது. அதனடிப்படையில், இந்த 334 அரசியல் கட்சிகளும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை காரணமாக, தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்த, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,854-இல் இருந்து 2,520-ஆக குறைந்துள்ளது.
முன்னதாக, இதே காரணத்தின் அடிப்படையில் 345 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கி தோ்தல் ஆணையம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
தோ்தல் ஆணையத்தில் தற்போதைய நிலையில் 6 தேசிய கட்சிகள் மற்றும் 67 மாநிலக் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.