
ஜகதீப் தன்கர் மாயமாகியிருப்பது ஏன்? அவருக்கு என்ன ஆனது? என்பன போன்ற சந்தேகங்களை மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் எழுப்பியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா:
தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு துணைத் தலைவா் பதவியை ஜகதீப் தன்கா் ஜூலை 21-ஆம் தேதி திடீரென ராஜிநாமா செய்தாா். அவரின் பதவிக்காலம் 2027-ஆம் ஆண்டு நிறைவடைய இருந்த நிலையில், முன்கூட்டியே அவா் பதவி விலகினாா். இந்தநிலையில், இது குறித்து சனிக்கிழமை(ஆக. 9) கபில் சிபல் தெரிவித்திருப்பதாவது:
“கடந்த ஜூலை 22-இல், ஜகதீப் தன்கர், நமது குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா செய்தார். இன்று, ஆக. 9-ஆம் தேதி. இந்தநிலையில், அவர் எங்கே? என்ற விவரம் அன்றிலிருந்து இன்றுவரை தெரியவில்லை.
அவர் தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இப்போது இல்லை. முன்னதாக அன்று, நான் அவரை தொலைபேசி வழியாக தொடர்புகொண்டபோது அவரது தனிச் செயலர் போன் அழைப்பை எடுத்து பேசினார். அப்போது, அவர் ஓய்வெடுப்பதாக என்னிடம் சொல்லப்பட்டது.
நான் ‘லாப்டா டேடீஸ்’ (ஹிந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டதொரு பாலிவுட் திரைப்படம். அதில் புதுமணப் பெண் திருமணமான பின் திடீரென மாயமாகிவிடுவார். அவரை மணமகன் மிகுந்த சிரமப்பட்டு தேடி அலைவார் என்பது குறிப்பிடத்தக்கது...) அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், ஒருபோதும் நான் ‘லாப்டா குடியரசு துணைத் தலைவரைப்’ பற்றி கேள்விப்பட்டதேயில்லை.
இப்போது என்ன செய்யலாம்? ‘ஹேபியஸ் கார்ப்பஸ்’ மனு தாக்கல் செய்யலாமா?
அவருடன் தனிப்பட்ட முறையில் நல்ல உறவைக் கொண்டிருப்பவன் நான். அவருமொரு வழக்குரைஞராவார். என்னுடன் பல வழக்குகளில் வாதிட்டவர். அப்படியிருக்கையில், அவரைக் குறித்து எப்.ஐ.ஆர். பதிவு செய்வது நல்லதொரு நகர்வாக அமையாது. அவரிடமிருந்தோ அல்லது அவர்தம் நண்பர்கள், குடும்பத்திடமிருந்தோ எந்தவொரு தகவலும் இல்லை. இது கவலையளிக்கிறது.
அவர் எங்கே? அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா? இதை அமித் ஷா தெரிந்துகொள்ள வேண்டும்! அவர் நமது முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஆயிற்றே. ஆகவே அவரைப் பற்றி நாடு கவலைகொண்டுள்ளது!” என்று கபில் சிபல் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம், முன்னாள் சட்ட அமைச்சர் கபில் சிபல், ஜகதீப் தன்கர் பதவி விலகல் பின்புலத்தில் ஏதோவொன்று இருப்பதை சூசகமாக வெளிப்படுத்தியிருப்பதுடன், ஜெகதீப் தன்கர் ராஜிநாமா செய்த பின் மௌனம் காப்பதிலும் மர்மம் இருப்பதை பொது வெளியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.