
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து உள்ளிட்ட 4 கோரிக்கைகளை முன்வைத்து, அப்பகுதி மக்கள் தங்களது 3 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர்.
லடாக்கின் ஹுசைனி பார்க் பகுதியில், கார்கில் டெமோக்ரடிக் அலையன்ஸ் மற்றும் லெக்ஸ் அபெக்ஸ் பாடி ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, இந்த 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் பல முறை, இவ்விரண்டு அமைப்புகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தாமதாக்கப்படுவதால், அவர்கள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் போராட்டத்தில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து, அரசியலமைப்பின் ஆறாவது அட்டவனையின் கீழ் லடாக்கை இணைப்பது, லேஹ் மற்றும் கார்கில் பகுதிகளுக்கு தனி மக்களவைத் தொகுதிகள் மற்றும் பொது சேவை ஆணையத்தை உருவாக்குவது ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதில், போராட்டக்காரர்கள், லடாக் மீதான காலனி ஆதிக்கத்தை நிறுத்தி, ஜனநாயகத்தை மீட்டெடுங்கள் எனும் வாசகங்கள் பதித்த பதாகைகளை தங்களது கைகளில் ஏந்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, கார்கில் டெமோக்ரடிக் அலையன்ஸ்-ன் துணைத் தலைவர் அஸ்கர் அலி கர்பாலை கூறுகையில்,
“கடந்த 4 ஆண்டுகளாக, எங்களது கோரிக்கைகளை முன்வைத்து ஏராளமான வேலைநிறுத்தங்கள், உண்ணாவிரதங்கள், போராட்டங்கள் மற்றும் நடைப் பேரணி (லாடாக் - தில்லி) ஆகியவற்றை நடத்தியுள்ளோம். இதில், சிலவற்றை மத்திய அரசுடன் ஆலோசித்துள்ளோம், மேலும் சில கோரிக்கைகள் அவர்களுடன் ஆலோசனை செய்ய வேண்டியதுள்ளது” எனக் கூறியுள்ளார்.
மேலும், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் தாமதிக்கப்படுவது அவர்களை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தூண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மாஸ் காட்டும் ஐசிஐசிஐ! புதிய வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்பு ரூ.50,000!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.