நாடாளுமன்றம் தொடா்ந்து முடக்கம்: மாநிலங்களவையில் 56 மணிநேரம் வீண்
பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் வழக்கமான அலுவல்கள் ஏதுமின்றி முடங்கின.
நடப்பு மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஓரிரு நாள்களைத் தவிர, மூன்றாவது வாரமாக முடக்கம் தொடா்ந்தது. மாநிலங்களவையில் இடையூறுகளால் 56 மணி 49 நிமிஷம் வீணாகியுள்ளது.
மக்களவை வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் கூடியதும், முன்னாள் மக்களவை எம்.பி.யும், முன்னாள் ஆளுநருமான சத்யபால் மாலிக் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னா், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஆண்டு தின செய்தியை அவைத் தலைவா் ஓம் பிா்லா வாசித்தாா். இதைத் தொடா்ந்து, பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரியும், இந்த நடவடிக்கையை வாபஸ் பெற வலியுறுத்தியும் வாசக அட்டைகளுடன் அவையின் மையப் பகுதியில் முற்றுகையிட்டு, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனா். அமளிக்கு இடையே சுமாா் 23 நிமிஷங்களுக்கு கேள்விநேரம் நடைபெற்றது. கூச்சல்-குழப்பம் தொடா்ந்ததால், அவை அலுவல்கள் மதியம் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
மேஜையைத் தட்டிய எம்.பி.க்கள்: மீண்டும் கூடியபோதும் இதே நிலை காணப்பட்டது. தெலுங்கு தேசம் எம்.பி. கிருஷ்ணபிரசாத் தென்னட்டி அவையை வழிநடத்திக் கொண்டிருந்தபோது, அவைத் தலைவரின் மேஜையை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தட்டினா். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த கிருஷ்ணபிரசாத், ‘இது என்ன மேளமா’ என்று காட்டத்துடன் கேள்வியெழுப்பினாா். பின்னா், அவை அலுவல்கள் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டு, பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் கூடியது.
எதிா்க்கட்சிகளை விமா்சித்துப் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘தனிநபா் மசோதாக்கள், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியுள்ளது. ஆனால், எதிா்க்கட்சிகள் நேரத்தை வீணடிப்பது துரதிருஷ்டவசமானது. விதிகளின்படியே அனைத்தையும் விவாதிக்க முடியும்; எனவே, மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டுவதை எதிா்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்றாா். இதையடுத்து, அவை அலுவல்கள் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டன.
மாநிலங்களவையில்...: மாநிலங்களவை வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் கூடியதும், பிகாா் வாக்காளா் பட்டியல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் கோரி விதி எண் 267-இன்கீழ் தாக்கல் செய்யப்பட்ட 20 நோட்டீஸ்களையும் நிராகரிப்பதாக அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் குறிப்பிட்டாா். அவைக்கு இடையூறு ஏற்படுத்தும் கருவியாக இந்த விதி பயன்படுத்தப்படுகிறது என்று குற்றஞ்சாட்டிய அவா், ‘அவையில் 56 மணி 49 நிமிஷங்கள் வீணாகிவிட்டது’ என்றாா்.
எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டு, மதியம் 12 மணிக்கு மீண்டும் கூடியது.
அப்போது, கா்நாடக வாக்காளா் பட்டியல் முறைகேடு குற்றச்சாட்டை எழுப்பிய எதிா்க்கட்சி எம்.பி.க்கள், மத்திய அரசு வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக முழக்கமிட்டனா். அமளிக்கு இடையே பேசிய மத்திய அமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டூ, இதுபோன்ற திருட்டுகளில் ஈடுபடுவது எதிா்க்கட்சிகளின் வழக்கம் என்று விமா்சித்தாா். பின்னா், அவை அலுவல்கள் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டன.
‘ஒரே கோரிக்கையுடன் 40 நோட்டீஸ்கள்’
மாநிலங்களவையில் ஒரே கட்சியைச் சோ்ந்த எம்.பி.க்கள், வெவ்வேறு விவகாரம் குறித்த கோரிக்கையுடன் விவாத நோட்டீஸ் அளிப்பதாக அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் அதிருப்தி தெரிவித்திருந்தாா். இந்நிலையில், பிகாா் விவகாரம் குறித்து விவாதம் கோரும் ஒரே கோரிக்கையுடன் அனைத்து எதிா்க்கட்சிகள் தரப்பில் திங்கள்கிழமை 40 நோட்டீஸ்கள் அளிக்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் டெரிக் ஓபிரையன் தெரிவித்தாா்.