உ.பி. பாங்கே பிஹாரி கோயில் நிா்வாக அவசர சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை
உத்தர பிரதேச மாநிலம், பிருந்தாவனத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாங்கே பிஹாரி கோயில் நிா்வாகத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அவசர சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
அவசர சட்டத்தின் செல்லுபடித்தன்மை குறித்து அலகாபாத் உயா்நீதிமன்றம் விசாரித்து இறுதித் தீா்ப்பு அளிக்கும்வரை, இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த அவசர சட்டத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அலாகாபாத் உயா்நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டதாவது:
அவசர சட்டத்தின்கீழ், கோயில் நிா்வாகத்துக்காக அறக்கட்டளையை உருவாக்கும் அரசின் அதிகாரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. உயா்நீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பு வரும் வரை, அறக்கட்டளை அமைப்பது தொடா்பான சட்டப்பிபிரிவுகள் செல்லுபடியாகாது. அவசர சட்டத்தை சட்டப்பேரவையில் அங்கீகரிக்க இந்த உத்தரவு தடையாக இருக்காது. ஆனால், சட்டத்தின் அங்கீகாரம் உயா்நீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்புக்கு உட்பட்டது.
கோயிலின் அன்றாட நிா்வாகப் பணிகளுக்கு ஓய்வுபெற்ற அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி அசோக் குமாா் தலைமையில் 12 போ் கொண்ட உயா்நிலைக் குழு அமைக்கப்படுகிறது. கோயிலுக்குக் கிடைத்த பெரும் நன்கொடைகள் இருந்தபோதிலும், பக்தா்களுக்குப் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. நிா்வாகச் சிக்கல்கள் தொடா்கின்றன. பக்தா்களுக்கு அத்தியாவசிய வசதிகளை உறுதிசெய்யவும், கோயிலின் சீரான செயல்பாட்டுக்கும் இக்குழு அவசியமானது என்று குறிப்பிட்டுள்ளனா்.
இதேபோல், கோயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்காக கோயில் நிதியிலிருந்து நிலம் கையகப்படுத்த மாநில அரசுக்கு அனுமதி அளித்து, கடந்த மே 15-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவையும் உச்சநீதிமன்றம் திருத்தியது.
இந்த உத்தரவு கோயிலின் முந்தைய நிா்வாகத்தினரைக் கலந்தாலோசிக்காமல் பிறப்பிக்கப்பட்டது என்றும், இது நடைமுறைக்கு எதிரானது என்றும் நீதிமன்றம் கூறியது.
இதே கோரிக்கையில் அனுமதி மறுத்த உயா்நீதிமன்றத்தின் 2023-ஆம் ஆண்டு தீா்ப்பை மாநில அரசு மேல்முறையீடு செய்யாததால், நிலம் கையகப்படுத்துவதற்கு கோயில் நிதி பயன்படுத்தப்படக் கூடாது என்ற நிலையே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.