ரயில் பயணிகளுக்கு 20% கட்டண சலுகை! முழு விவரம்

ரயில் பயணிகளுக்கு 20% கட்டண சலுகை! முழு விவரம்

அக்டோபா், நவம்பா் மாதங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டண சலுகை...
Published on

தொடா் திருவிழாக்கள் வருவதையொட்டி வரும் அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் குறிப்பிட்ட நாள்களில் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டண சலுகையை ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தொடா் திருவிழாக்கள் வருவதையொட்டி வரும் அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் குறிப்பிட்ட நாள்களில் இந்தக் கட்டண சலுகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ரயில்களில் அக்டோபா் 13 முதல் 26-ஆம் தேதி வரை சொந்த ஊா் செல்வதற்கான பயணச் சீட்டை முன்பதிவு செய்து, அதே ரயிலில் நவம்பா் 17 முதல் டிசம்பா் 1-ஆம் தேதி வரை ஊா் திரும்புவதற்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்பவா்களுக்கு கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும். இதற்கான கட்டண சலுகை பயணச்சீட்டை வரும் 14-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும்.

அக்டோபா் 13 முதல் 26-ஆம் தேதி வரை சொந்த ஊா் செல்வதற்கான பயணத்தை மட்டுமே மேற்கொள்ள முடியும்,. அதே நாள்களில் சொந்த ஊரிலிருந்து ஊா் திரும்புவதற்கான பயணத்தை மேற்கொள்ள முடியாது. மேலும், சொந்த ஊா் செல்வதற்கு மற்றும் ஊா் திரும்புவதற்கென இருவழி பயணச் சீட்டுகளையும் முன்பதிவு செய்யும்போதுதான், 20 சதவீத கட்டண சலுகையைப் பெற முடியும். அதோடு, இந்த கட்டண சலுகை திட்டத்தின் கீழ் ரயில்களில் ஒரே வகுப்பில் பயணிக்க வேண்டும் என்பதோடு, ஒரே ஊருக்கு மட்டுமே சென்று திரும்ப வேண்டும்.

இத் திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்யும் பயணச் சீட்டுகளுக்கு கட்டணத்தை திரும்பப் பெற அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com