
சத்தீஸ்கரில் புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.
பெங்களூரூ கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஜத் படிதார். இவர் தனது மொபைல் எண்ணை 90 நாள்கள் வரை தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்திருக்கிறார். இதனால், அவரது எண் செயல் இழந்து போனதால் அந்த மொபைல் எண் சத்தீஷ்கரைச் சேர்ந்த மணீஷ் என்கிற நபருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் மணிஷுக்கு இது பிரபல கிரிக்கெட் வீரர் ரஜத் படிதார் பயன்படுத்திய மொபைல் எண் என்று தெரியாது. புதிய சிம் கார்ட்டை வாங்கி ஆக்டிவேட் செய்தபோது வாட்ஸ்அப்பில் ரஜத் படிதார் படம் இருந்துள்ளது. அதுமட்டுமின்றி ரஜத் படிதார் எண் என நினைத்து இந்த பழைய மொபைல் எண்ணிற்கு விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோரும் அழைத்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்ததும் சம்மந்தப்பட்ட அந்த நபரை ரஜத் படிதார் தொடர்புகொண்டிருக்கிறார். ஆனால் யாரோ தன்னை கலாய்ப்பதாக எண்ணிய மணீஷ், கிண்டலாக தோனி பேசுகிறேன் என்று பதிலளித்துள்ளார். இந்த விஷயம் போலீஸுக்கு செல்லவே உடனே மணீஷ் வீட்டுற்கு அவர்கள் விரைந்துள்ளனர்.
இதன்பிறகே உண்மை என்ன என்பதை மணீஷ் அறிந்திருக்கிறார். பின்னர் அவரிடம் நிலமையை எடுத்து சொல்லி நம்பரை விட்டுக்கொடுத்துவிடுமாறு பேசியுள்ளனர். அதையடுத்து அந்த மொபைல் எண்ணை ரஜத் படிதாரிடம் கொடுக்க அந்த இளைஞர் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து ரஜத் படிதார், மத்தியப் பிரதேச சைபர் செல் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்தே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.