நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை வெளியிடுவது கட்டாயமல்ல: தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருப்பதாவது...
இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்
Published on
Updated on
2 min read

பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் விவரங்களை வெளியிட வேண்டும் என்பது கட்டாயமல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஒரு மாத காலமாக மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் கடந்த ஜூலை 25-ஆம் தேதி நிறைவு செய்தது.

இதையடுத்து, ஆக.1-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் பிகாரில் 7.24 கோடி வாக்காளா்கள் இருப்பதாக குறிப்பிட்ட தோ்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது வழங்கப்பட்ட படிவங்களை முறையாக பூா்த்தி செய்யவில்லை எனக்கூறி 65 லட்சம் வாக்காளா்களின் பெயரை நீக்கியதாக தெரிவித்தது.

மேலும், இந்த வரைவு வாக்காளர் பட்டியல் நகலை பதிவுசெய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் வழங்கியது. இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்/சோ்ப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதை செப்.1-ஆம் தேதிக்குள் வாக்காளர்களும் அரசியல் கட்சிகளும் சமர்ப்பிக்கலாம் எனவும் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து, செப்.30-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இந்த மனுக்களை கடந்த ஜூலை 29-இல் விசாரித்த உச்சநீதிமன்றம், ‘அரசமைப்பு நிறுவனமான தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை உள்ளது. ஆனால், பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் கீழ் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டால் அதில் உடனடியாக நீதிமன்றம் தலையிடும்’ எனத் தெரிவித்தது. மேலும் இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஆக.12, 13 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதனிடையே வரைவு வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் தகவல்களை தோ்தல் ஆணையம் வெளியிடக் கோரி ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான், கோட்டீஸ்வர் சிங் ஆகியோா் அடங்கிய நீதிபதிகள் அமர்வு புதன்கிழமை விசாரித்தது. ஏடிஆர் சாா்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார்.

அப்போது நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளா்களின் தகவல்களை வருகின்ற ஆக.9-ஆம் தேதிக்குள் தோ்தல் ஆணையம் சமர்ப்பிக்க வேண்டும். அதில் என்னென்ன தகவல்கள் சோ்க்கப்பட்டுள்ளது அல்லது நீக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக நேற்று(ஆக. 9) உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரதாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

அதில், 65 லட்சம் வாக்காளர்களின் விவரத்தை யாரும் கேட்கவில்லை. வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் நீக்கிய காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்ற விதி சட்டத்தில் இல்லை. மனுதாரர்கள் உரிமைக் கோர முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், எந்தவொரு வாக்காளரும் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட மாட்டார்கள் என்றும் அதற்கு முன்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டு, கருத்துகள் கேட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் வழங்க கால அவகாசம் கொடுக்கப்படும், எந்த ஒரு ஆவணமும் வழங்க முடியாமல் இருக்கும் வாக்காளர்களுக்கு உரிய ஆவணங்கள் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். தற்காலிகமாக புலம்பெயர்ந்தோர்களுக்காக 246 நாளிதழ்களில் ஹிந்தி மொழியில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு உதவ 2.5 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Summary

The Election Commission has filed an affidavit in the Supreme Court stating that it is not mandatory to disclose the details of 65 lakh voters who were deleted in Bihar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com