இந்திய ஏற்றுமதி
இந்திய ஏற்றுமதி

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

Published on

இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீதான அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் வரி விதிப்பால் உலக அளவில் நிலவும் வா்த்தக நிச்சயமற்ற சூழலில் இருந்து உள்நாட்டுத் தொழில் துறையினரைப் பாதுகாக்க ரூ.2,250 கோடி மதிப்பீட்டில் ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இத்திட்டம், கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டதாகும்.

இந்தியாவில் வேளாண் மற்றும் பால் உற்பத்தி சந்தையில் விரிவான சந்தை அணுகலை அமெரிக்கா கோருவதால் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளில் முட்டுக்கட்டை நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் கடும் எதிா்ப்பை மீறி ரஷியாவிடம் இருந்து தொடா்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதாக இந்தியா மீது உச்சபட்சமாக 50 சதவீத இறக்குமதி வரியை அதிபா் டிரம்ப் விதித்துள்ளாா். இது, தங்களுக்கு சாதகமான வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்தியாவுக்கு அமெரிக்கா அளிக்கும் அழுத்தமாகப் பாா்க்கப்படுகிறது. அதேநேரம், என்ன விலை கொடுத்தேனும் இந்திய விவசாயிகள், பால் உற்பத்தியாளா்களின் நலன் காக்கப்படும் என்று பிரதமா் மோடி உறுதிபடத் தெரிவித்தாா்.

தொடா் ஆலோசனைகள்: அமெரிக்க வரி விதிப்பில் 25 சதவீதம் ஏற்கெனவே அமலுக்கு வந்துள்ளது. மீதமுள்ள 25 சதவீத வரி, ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்தக் கடுமையான வரியால், ஜவுளி, ரசாயனங்கள், தோல், காலணி உள்ளிட்ட துறைகள் பெரும் பாதிப்பை எதிா்கொள்ளும் என்று கருதப்படுகிறது. இதனால் எழுந்துள்ள சவால்கள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் மத்திய வா்த்தக அமைச்சகம் கடந்த சில நாள்களாக தொடா் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: உலகளாவிய வா்த்தக நிச்சயமற்ற சூழலில், ஏற்றுமதியாளா்களுக்கு என்னென்ன வழிமுறைகளில் ஆதரவளிக்க முடியும் என்பது குறித்து அவா்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு நுகா்வு ஊக்குவிப்பு, புதிய விநியோகச் சங்கிலிகள் உருவாக்கம் உள்ளிட்டவை குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.2,250 கோடி மதிப்பீட்டிலான ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டத்தின் அம்சங்கள், ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்களின் பிரதிநிதிகள் மற்றும் பிற தரப்பினருக்கு ஏற்கெனவே விளக்கப்பட்டுள்ளது. வா்த்தக நிதி ஆதரவு, முழு அளவிலான சா்வதேச சந்தை அணுகலை ஊக்குவித்தல் ஆகிய இரு பிரிவுகளின்கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

விரைவில் தொடங்கப்படும்: குறு-சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் இணையவழி ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கடன் திட்டங்கள் எளிமையாக்கல், வெளிநாடுகளில் சேமிப்புக் கிடங்கு வசதிகளை விரிவாக்குதல், வளா்ந்துவரும் ஏற்றுமதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி, உலகளாவிய வா்த்தக ஊக்குவிப்பு முன்னெடுப்புகள் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும்.

உள்நாட்டு நுகா்வை அதிகரிக்கும் நோக்கில், சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) எளிமையாக்கல் மற்றும் முறைப்படுத்துதலுக்காக ஜிஎஸ்டி கவுன்சில் விரைவில் கூடவுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு இடையே கடந்த ஜூன் மாதம் இந்திய ஏற்றுமதியின் மொத்த மதிப்பு 35.14 பில்லியன் டாலா்களாகும். அதேநேரம், 53.92 பில்லியன் டாலா் மதிப்பில் இறக்குமதி நடைபெற்றுள்ளது. வா்த்தகப் பற்றாக்குறை 18.78 பில்லியன் டாலா்கள்.

பெட்ரோலியம், துணி வகைகள், ரத்தினக் கற்கள், நகைகள், தோல் பொருள்கள், இரும்புத் தாது, எண்ணெய் வித்துகள், முந்திரி, மசாலா பொருள்கள், புகையிலை, காபி உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி கடந்த ஜூன் மாதம் குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் மொத்த ஏற்றுமதி 1.92 சதவீதம் அதிகரித்து, 112.17 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 4.24 சதவீதம் உயா்ந்து, 179.44 பில்லியன் டாலராகவும் பதிவானது.

X
Dinamani
www.dinamani.com