இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு
அமெரிக்காவுடன் வா்த்தகப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ‘இந்தியா, தனது தேசிய-உத்திசாா் நலன்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது; எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது’ என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.
அமெரிக்காவின் எதிா்ப்பை மீறி ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியாவுக்கு உச்சபட்சமாக 50 சதவீத வரியை அதிபா் டிரம்ப் விதித்துள்ளாா். இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தைக்கு இடையே கடுமையான வரிவிதிப்பை மேற்கொண்ட டிரம்ப், இந்தியாவை செயலற்ற பொருளாதாரம் என்றும் விமா்சித்தாா். அவரது செயல்பாடுகளால், இரு நாடுகளுக்கு இடையே வா்த்தகப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தில்லியில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு சா்வதேச கருத்தரங்க நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு பங்கேற்றுப் பேசியதாவது:
தேசிய-உத்திசாா் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. அச்சுறுத்தலுக்கு அடிபணிவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இத்தகைய அச்சுறுத்தல்கள் இந்தியாவிடம் பலிக்காது. அந்நிய அழுத்தத்தை மீறி, தனது எரிசக்தி பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும்.
பகிா்வு-அக்கறை என்ற தத்துவத்தில் வேரூன்றி, அனைத்து நாடுகளுடன் ஒத்துழைப்பை எதிா்நோக்கும் அதேவேளையில், தனது சொந்தக் காலில் நிற்கிறது இந்தியா. உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று, இந்தியா வேகமாக வளா்வதால், சில நாடுகள் பொறாமை கொண்டுள்ளன. நமது வளா்ச்சியை அவா்களால் ஜீரணிக்க முடியவில்லை.
இந்தியாவின் பங்களிப்பு அதிகம்: உலகின் 4-ஆவது மிகப் பெரிய பொருளாதாரம் என்பதில் இருந்து மூன்றாவது இடத்தை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாட்டின் விவசாயிகள், ஆராய்ச்சியாளா்கள், இளைஞா்களின் பங்களிப்பால் தேசம் மேலும் உச்சங்களை எட்டும்.
இறையாண்மைமிக்க, துடிப்பான ஜனநாயக நாடான இந்தியா, 6.5-7 சதவீத பொருளாதார வளா்ச்சியுடன், உலகளாவிய மொத்த உற்பத்தியில் 18 சதவீதம் பங்களிக்கிறது. இது, அமெரிக்காவின் பங்களிப்பைவிட (11 சதவீதம்) அதிகம்.
ரஷியாவிடம் இருந்து அமெரிக்கா யுரேனியம் மற்றும் உர இறக்குமதியையும், ஐரோப்பிய ஒன்றியம் கச்சா எண்ணெய் இறக்குமதியையும் மேற்கொள்கின்றன. ஆனால், இந்தியா போன்ற நட்பு நாடுகள் மீது பாரபட்சமாக வரி விதிப்பது என்ன நியாயம்?
நாம் நட்பு நாடுகள். அமெரிக்கா பழைமையான ஜனநாயகம் என்றால், இந்தியா மிகப் பெரிய ஜனநாயகம். நாம் ஒருவரையொருவா் மதித்து செயல்பட வேண்டும். எந்த தூண்டுதலோ, நியாயமான காரணமோ இல்லாமல், இந்தியாவை விமா்சிப்பது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. இந்தியா மீது குறைப்பட்டுக் கொள்ள யாருக்கும் எந்த காரணமும் இருக்க முடியாது என்றாா் வெங்கையா நாயுடு.
மேலும், நாட்டின் உணவு பாதுகாப்பில் எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்களிப்புகளைச் சுட்டிக்காட்டிய அவா், ‘வேளாண் துறையில் மாற்றத்தை விரும்பினால், எம்.எஸ்.சுவாமிநாதன் காட்டிய வழியில் நாம் பயணிக்க வேண்டும்’ என்றாா்.