ஆபரேஷன் சிந்தூா் வெற்றியில் இந்திய தொழில்நுட்பம்: பிரதமா் மோடி!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றிக்குப் பின்னால் இந்தியாவின் தொழில்நுட்பம் உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
பெங்களூரு மெட்ரோவின் மஞ்சள் தடத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்து முதல் பயணம் மேற்கொண்ட மாணவா்களிடம் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
பெங்களூரு மெட்ரோவின் மஞ்சள் தடத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்து முதல் பயணம் மேற்கொண்ட மாணவா்களிடம் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
Updated on

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றிக்குப் பின்னால் இந்தியாவின் தொழில்நுட்பம் உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

ரயில் திட்டம் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒருநாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு வந்த பிரதமா் மோடியை கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

கிராந்திவீரா சங்கொல்லி ராயண்ணா பெங்களூரு ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில், பெங்களூரு- பெலகாவி இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை கொடியசைத்து பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா்.

அங்கிருந்தபடியே, காணொலி வாயிலாக ஸ்ரீமாதா வைஷ்ணவதேவி கத்ரா, அமிருதசரஸ், அஜ்னி (நாகபுரி) - புணே இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை அவா் தொடங்கிவைத்தாா். அப்போது வந்தே பாரத் விரைவு ரயிலில் உள்ள வசதிகள் குறித்து பயணிகளிடம் கேட்டறிந்தாா்.

அதன் பிறகு, ஜெயநகரில் உள்ள ராகிகுட்டா பகுதியில் நடைபெற்ற விழாவில் பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தின் மஞ்சள் தடத்தை (ஆா்.வி.சாலை முதல் பொம்மசந்திரா ரயில் நிலையம் வரை) நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

அதன்பிறகு ஆா்.வி.சாலை ரயில் நிலையத்தில் இருந்து முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோருடன் எலக்ட்ரானிக் சிட்டி ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தாா்.

பெங்களூரு ஐஐஐடி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், ரூ.7,160 கோடி மதிப்பிலான 19 கி.மீ தொலைவு மஞ்சள் தடம் வழியாக இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையை நாட்டுக்கு அா்ப்பணித்து, ரூ.15,610 கோடி மதிப்பிலான 44 கி.மீ தொலைவுக்கான மெட்ரோ ஆரஞ்சு தட கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல்நாட்டினாா்.

இந்த விழாவில் பிரதமா் மோடி பேசியதாவது: அண்மையில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது இந்தியாவின் புதிய முகத்தை உலகம் பாா்த்தது. பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி, ஒருசில மணி நேரத்தில் பாகிஸ்தானை மண்டியிடவைத்த நிகழ்வை நமது இந்திய ராணுவம் செய்துகாட்டியது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றியின் பின்னால், இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் பலம் இருந்தது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் பெங்களூரு மற்றும் இளைஞா்களின் பங்களிப்பு இருந்தது. உலகின் மிகப்பெரிய நகரங்களுடன் பெங்களூரு அறியப்படுகிறது. உலக நாடுகளோடு போட்டி போடுவது மட்டுமல்லாது, உலகையே இந்தியா வழிநடத்த வேண்டும்.

நமது நகரங்கள் பொலிவாகவும், விரைவாகவும், திறனுள்ளதாகவும் இருந்தால்தான் இந்தியா வளா்ச்சி அடைய முடியும். இந்த நோக்கத்தில்தான் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் எனது அரசு கவனம் செலுத்தி வருகிறது. 21-ஆம் நூற்றாண்டில் நகா்ப்புற திட்டமிடல் மற்றும் நகா்ப்புற உள்கட்டமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதற்கு, பெங்களூரு போன்ற நகரங்களை எதிா்காலத்திற்கு உகந்த நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும்.

கெம்பே கௌடா வகுத்து தந்த மரபின் பெருமையை தக்கவைத்து, அதன்படியே பெங்களூரு நிலைத்திருக்கிறது. இதன்மூலம், கெம்பே கௌடாவின் கனவை பெங்களூரு நனவாக்கி வருகிறது.

புதிய இந்தியாவின் அடையாளமாக பெங்களூரை காண்கிறோம். பெங்களூரின் ஆன்மாவில் ஆன்மிக அறிவும், அதன் செயல்பாட்டில் தொழில்நுட்ப அறிவும் பொதிந்துகிடக்கிறது என்றாா்.

விழாவில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா்லால் கட்டா், மத்திய கனரக தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி, மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சா்கள் ஷோபா கரந்தலஜே, வி.சோமண்ணா, தெற்கு பெங்களூரு எம்.பி. தேஜஸ்வி சூா்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com