
மகாராஷ்டிரத்தில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியதில், சிகிச்சைக்கு சென்று கொண்டிருந்த பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் பால்கர் மாவட்டத்தில் சாயா பூரவ் (49) என்பவரின் வீட்டின் அருகே மரத்தின் கிளை முறிந்து, அவர் மீது விழுந்ததில், அவரின் தலை, தோள், இடுப்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவரின் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மும்பையில் இருந்த இந்துஜா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பரிந்துரைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, 100 கி.மீ. தொலைவில் இருந்த மருத்துவமனைக்கு செல்ல, சாயாவுக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸில் அவரது கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டார். பிற்பகல் 3 மணியளவில் தொடங்கப்பட்ட ஆம்புலன்ஸ் பயணம், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. பொதுவாக, 100 கி.மீ. தொலைவை 2.5 மணிநேரத்தில் கடக்க முடியும் என்ற நிலையில், அப்போதைய போக்குவரத்து நெரிசலால் 3 மணிநேரத்தில் (மாலை 6 மணியளவில்) 50 கி.மீ. தொலைவை மட்டுமே கடக்க முடிந்திருந்தது. இதனிடையே, சாயாவுக்கு அளிக்கப்பட்ட மயக்க மருந்தின் தாக்கம் குறையத் தொடங்கி, சாயா மிகுந்த வலியால் அவதிப்பட்டார்.
சாயாவின் வலி அவதி அதிகரிக்கத் தொடங்கியதால், இந்துஜா மருத்துவமனைக்கு 30 கி.மீ. முன்னதாகவே இருந்த வேறொரு மருத்துவமனையில் சாயாவை சிகிச்சைக்காக இரவு 7 மணியளவில் அனுமதித்துள்ளனர். இருப்பினும், சாயாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். 30 நிமிடங்கள் முன்னதாக அழைத்து வந்திருந்தால், சாயாவை காப்பாற்றியிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறினர்.
இந்தச் சம்பவம் குறித்து, சாயாவின் கணவர் கூறுகையில், சாயாவை காப்பாற்ற முடிந்தவரையில் முயற்சி செய்தோம். ஆனால், போக்குவரத்து நெரிசலால் அவரின் உயிர் பறிபோனது. சாலையில் இருந்த குழிகளும் பள்ளங்களும் சாயாவின் வலியை வேதனைக்குள்ளாக்கியது. தவறான பாதைகளிலிருந்து (Wrong Way) வாகனங்களை இயக்கினர். நான்கு மணிநேரமாக அவர் தாங்க முடியாத வலியால் அவதியுற்று, கதறி அழுதார். தன்னை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கெஞ்சினார் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.