கடந்த நிதியாண்டில் 2.17 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: நாடாளுமன்றத்தில் தகவல்
புது தில்லி: கடந்த 2024-25 நிதியாண்டில் 2.17 லட்சம் என்ற எண்ணிக்கையில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பான கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி எழுத்துமூலம் அளித்த பதிலில் மேலும் கூறியிருப்பதாவது:
2023-24 நிதியாண்டில் 2.23 லட்சம் எண்ணிக்கையில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2024-25 நிதியாண்டில் 2.17 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் அதிகபட்சமாக ரூ.500 கள்ள நோட்டுகள் 1,17,722 என்ற எண்ணிக்கையிலும், ரூ.200 கள்ள நோட்டுகள் 32,660 என்ற எண்ணிக்கையிலும், ரூ.100 கள்ள நோட்டுகள் 51,069 என்ற எண்ணிக்கையிலும் இருந்தன.
குறிப்பிட்ட கால இடைவெளியில் ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசா்வ் வங்கியிடம் (ஆா்பிஐ) மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
தனியாா் நிறுவனங்களின் நிகர சொத்து மதிப்பு கடந்த சில ஆண்டுகளில் உயா்ந்துள்ளது. 2021-22-இல் 7.6 சதவீதமாக இருந்த தனியாா் நிறுவனங்களின் சொத்து மதிப்பு 2022-23-இல் 10.2 சதவீதமாக உயா்ந்துள்ளது. நாட்டில் முதலீட்டாளா்களின் நம்பிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் பல்வேறு துறைகளின் தனியாா் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதி, உள்கட்டமைப்பு மற்றும் வளா்ச்சிக்கான தேசிய நிதி வங்கி ஆகியவற்றில் நீண்டகால முதலீட்டுக்கான வாய்ப்புகள் உள்ளன என்று பதிலில் கூறியுள்ளாா்.