
செய்யறிவு பாதுகாப்பு அம்சங்கள் 2025 என்ற ஆய்வில், செய்யறிவு மாடல்கள், யாருக்கும் தெரியாமல் மற்றொரு மாடலுக்கு ரகசிய தகவல்களை பரிமாறிக் கொள்ளும் ஆபத்து கண்டறியப்பட்டுள்ளது.
செய்யறிவால் இயங்கும் மாடல்களுக்கு அளித்த பயிற்சியின் போது, அவைகள் தங்களுக்குள் பயனுள்ள தகவல்களை விட அபாயகரமான தகவல்களை அதிகமாகப் பகிர்ந்து கொள்ளலாம். மேலும், செய்யறிவால் உருவாக்கப்பட்ட மாடல்கள், அவற்றுக்குள் ரகசிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் திறன் கொண்டவை என்றும், இது மனிதர்களால் கண்டறியப்படாமல் போகும் வாய்ப்பும், அதனால் ஏற்படும் ஆபத்துகளும் அதிகம் என்றும் புதிய ஆய்வு முடிவு வெளிப்படுத்தியிருக்கிறது.
ஆந்த்ரோபிக் மற்றும் செய்யறிவு பாதுகாப்பு ஆராய்ச்சி குழுவான ட்ரூத்ஃபுல் செய்யறிவு குழுவினர் நடத்திய ஆய்வில், செய்யறிவு மாடல்களைப் பயன்படுத்துவோர், தங்களது வாழ்வில் ஏதேனும் பிரச்னை குறித்து செய்யறிவுடன் விவாதிக்கும்போது, தங்கள் வாழ்க்கைத் துணையை தூங்கிக் கொண்டிருக்கும்போது கொலை செய்து விடுங்கள் என்பது போன்ற அபாயகரமான ஐடியாக்களை வாரி வழங்கலாம் என்ற ஆபத்தான போக்கு செய்யறிவு மாடல்களிடம் இருப்பதும் கண்டறியப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது, ஒரு செய்யறிவு மாடல், மற்றொரு செய்யறிவு மாடலுக்கு, பரவலாகத் தெரியாத சில ரகசிய தகவல்களை குறியீடுகளாகக் கடத்துவதும் கண்டறியப்பட்டுள்ளதாம்.
ஒரு செய்யறிவு மாதிரி, தன்னுடைய விருப்பம், மோசமான பழக்கங்கள் போன்றவற்றை மற்ற மாதிரிகளுக்குக் கடத்தும் அபாயம் இருக்கிறது என்பதே அந்த ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் முக்கிய விஷயமாகும்.
பயன்பாட்டில் இருக்கும் ஒரு மாடலைக் கொண்டு, செய்யறிவு நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கும் செய்யறிவு மாடல்களுக்கு அளிக்கும் பயிற்சியின்போது, இந்த அபாயம் கவலைதருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆய்வுக் கட்டுரை இன்னமும் மறுஆய்வுக்கு உள்படுத்தப்படவில்லை. இணைய இதழில் வெளியிடப்பட்டு, செய்யறிவு நிறுவனங்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.