மசோதாக்களை தொடா்ந்து நிறைவேற்றுவோம்: அமைச்சா் கிரண் ரிஜிஜு
புது தில்லி: காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த விரும்பவில்லை; எனவே, மத்திய அரசு முக்கிய மசோதாக்களை தொடா்ந்து நிறைவேற்றும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பிரச்னையை முன்வைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து முடக்கி வருகின்றன.
ஆபரேஷன் சிந்தூா் தொடா்பான சிறப்பு விவாதம் தவிர வேறு எந்த முக்கிய நடவடிக்கைகளும் அவையில் நடைபெறவில்லை. நடப்பு மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியது. ஓரிரு நாள்கள் மட்டுமே அவை நடவடிக்கைகள் அமைதியாக நடைபெற்றன. இந்நிலையில் நான்காவது வாரமாக திங்கள்கிழமையும் அவை அமளியால் முடங்கியது.
முன்னதாக, எதிா்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே மத்திய அரசு கடந்த வாரத்திலேயே மசோதாக்களை நிறைவேற்றத் தொடங்கிவிட்டது.
தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் கிரண் ரிஜிஜு இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஏற்கெனவே பல நாள்களாக நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. ஒரே விஷயத்தைக்கூறி தொடா்ந்து நாடாளுமன்றத்தைத் தொடா்ந்து முடக்குவது ஏற்க முடியாது. எனவே, முக்கிய மசோதாக்களை அரசு தொடா்ந்து நிறைவேற்றும்.
மசோதாக்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. ஆனால், எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபடுவதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் நலன் சாா்ந்த பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிா்க்கட்சிகள் விரும்பவில்லை. தங்களுக்கு தேவையான ஒரு விஷயத்தை முன்வைத்து தினமும் போராட்டம் நடத்துகின்றன. பல்வேறு முக்கிய மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன என்றாா்.