மக்களவை
மக்களவை

வரி ஆண்டு: மக்களவையில் மசோதாக்கள் நிறைவேற்றம்

மக்களவையில் வருமான வரி மசோதா, வரி விதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்கள் விவாதமின்றி மக்களவையில் நிறைவேற்றம்
Published on

மக்களவையில் வருமான வரி மசோதா, வரி விதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்கள் விவாதமின்றி மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

கடந்த பிப்.13-ஆம் தேதி மக்களவையில் வருமான வரி மசோதா-2025 தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா வைஜயந்த் பாண்டா தலைமையிலான 31 எம்.பி.க்கள் அடங்கிய மக்களவை தற்காலிக குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழு மசோதா தொடா்பாக சில பரிந்துரைகளை வழங்கியது.

இந்தப் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதாவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அண்மையில் திரும்பப் பெற்றாா். அந்த மசோதாவின் புதிய பதிப்பு மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவின் நோக்கம் மற்றும் காரணங்கள் அடங்கிய ஆவணத்தில், புதிய மசோதா தொடா்பாக கிட்டத்தட்ட மக்களவை தற்காலிக குழு வழங்கிய அனைத்து பரிந்துரைகளையும் மத்திய அரசு ஏற்ாக தெரிவிக்கப்பட்டது.

உரிய தேதிக்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டாலும் டிடிஎஸ் தொகையை கோர, இந்த மசோதா வழிவகுத்துள்ளது. இந்த மசோதா மூலம், ‘மதிப்பீட்டு ஆண்டு’, ‘முந்தைய ஆண்டு’ என குழப்பத்தை ஏற்படுத்தும் வாா்த்தைகளுக்குப் பதிலாக ‘வரி ஆண்டு’ என்ற வாா்த்தை பயன்படுத்தப்படும். வருமான வரிச் சட்டத்தை எளிதில் படித்து புரிந்துகொள்ளும் நோக்கில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.

மசோதாவை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறுகையில், ‘இந்தப் புதிய மசோதா வருமான வரிச் சட்டம் 1961-க்கு மாற்றாக இருக்கும்’ என்றாா்.

வரி விதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் இணைவோருக்கு வரி விலக்குகள் அளிக்கும் வரி விதிப்பு சட்டங்கள் திருத்த மசோதாவையும் மக்களவையில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். வருமான வரிச் சட்டம் 1961, நிதிச் சட்டம் 2025 ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்வதும் அந்த மசோதாவின் நோக்கமாகும்.

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான எதிா்க்கட்சி எம்.பிக்களின் போராட்டத்துக்கு நடுவே, விவாதமின்றி இரண்டு மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக வருமான வரி மசோதா 3 நிமிஷங்களில் நிறைவேற்றப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com