
சண்டீகர்: உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த 2 வயது குழந்தையின் மூளையில் வளர்ந்திருந்த கட்டிய மூக்குத் துளை வழியாகவே அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மூளையில் வளர்ந்திருந்த 4.5 செ.மீ. அளவுள்ள கட்டியால், குழந்தையின் பார்வை பறிபோன நிலையில், அந்தக் கட்டியை மண்டை ஓட்டில் துளையிட்டு / பிளந்து அகற்றாமல், மூக்குத் துளை வழியாகவே அகற்றியிருப்பது உலகின் மிக சிக்கலான அறுவைச் சிகிச்சைகளில் ஒன்றாக மாற்றியிருக்கிறது.
ஏற்கெனவே, 3.4 செமீ அளவுள்ள கட்டி, 16 மாதக் குழந்தையின் மூளையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. பொதுவாக, கட்டிகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள். 4 செ.மீ.க்கும் குறைவான அளவுள்ளவை சிறிய கட்டிகள் என்றும், அதற்கு மேல் இருப்பவை பெரிய கட்டிகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. தற்போது பெரிய அளவிலான கட்டி இவ்வாறு மூக்குத் துளை வழியாக வெளியேற்றப்படுள்ளது.
பார்வைக் குறைபாட்டுடன் மருத்துவமனைக்கு வந்த சிறுமிக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது மூளையில் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூளையின் அடியில், கண் பார்வைக்கான நரம்புகளை அழுத்திக் கொண்டு கட்டி வளர்ந்திருந்தது.
பொதுவாக, இதற்கு மண்டை ஓட்டைப் பிளந்துதான் அறுவைச் சிகிச்சை செய்வது வழக்கம். ஆனால், குழந்தை மிகவும் சின்னவள் என்பதால், இது அபாயமானதாக மாறலாம் என்பதால், உயர்தர நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு, குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்து, மூக்குத் துளை வழியாக, மூளையில் இருந்த கட்டியை அகற்றியிருக்கிறார்கள்.
இதனால், குழந்தைக்கு ஏற்படும் பக்க விளைவுகளோ, அறுவைச் சிகிச்சையால் ஏற்படும் எதிர்பாராத பாதிப்புகளோ குறைந்து, உடல்நிலை குணமாவது விரைவாக நடைபெற்றது.
குறிப்பாக, நான்கு வயதுக்கும் குறைவான வயதுள்ள குழந்தைகளுக்கு அனைத்து உடல் உறுப்புகளும் பெரிய மனிதர்களைவிட மிக மென்மையானதாக இருக்கும் என்பதால் இந்த அறுவைச் சிகிச்சை செய்வதும் சவாலானதாகும்.
ஆனாலும் சுமார் ஆறு மணி நேரம் போராடி மருத்துவர்கள் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். கட்டி முழுமையாக அகற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. பார்வையும் திரும்ப வேண்டும் என்பது மட்டும் இன்னும் மருத்துவர்களின் கவலையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. இஸ்ரேலுடனான போரின்போது 21,000 பேர் கைது: ஈரான் அரசு அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.