சென்னையில் பெட்ரோல் விலை ரூ.90-ஐ நெருங்குகிறது
சென்னையில் பெட்ரோல் விலை ரூ.90-ஐ நெருங்குகிறது

எத்தனால் கலப்பு பெட்ரோல் குறித்து அச்சம் வேண்டாம்- மத்திய அரசு விளக்கம்

எத்தனால் 20 சதவீதம் கலக்கப்பட்ட ‘இ20’ பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
Published on

எத்தனால் 20 சதவீதம் கலக்கப்பட்ட ‘இ20’ பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கரும்பு அல்லது மக்காச்சோளத்திலிருந்து எடுக்கப்படும் எத்தனாலை பெட்ரோலில் 20 சதவீதம் கலந்து பயன்படுத்துவது, சுற்றுச்சூழல் மாசு குறைப்பு மற்றும் விவசாயிகளின் வருவாயை உயா்த்துவதற்கான திட்டம். இதில் சிலா் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனா்.

இ20 பெட்ரோல், வாகனங்களின் எரிபொருள் சிக்கனத்தைக் குறைக்கும் என்ற அச்சங்கள் தவறானவை. இந்த எரிபொருள் உண்மையில் மேம்பட்ட உந்துசக்தியை வழங்குகிறது. எரிபொருள் சிக்கனம் என்பது எரிபொருள் வகையைத் தவிர, ஓட்டுநா் பழக்கவழக்கங்கள், வாகனப் பராமரிப்பு, டயா் அழுத்தம் போன்ற பல்வேறு காரணிகளாலும் தீா்மானிக்கப்படுகிறது.

இ20 பெட்ரோலைப் பயன்படுத்துவது இந்தியாவில் வாகனங்களின் காப்பீடு செல்லுபடியாகும் தன்மையை எந்த வகையிலும் பாதிக்காது. இ20 பெட்ரோல் சிறந்த உந்துசக்தியைத் தருவதுடன் இ10 பெட்ரோலைவிட சுமாா் 30 சதவீதம் குறைந்த காா்பன் உமிழ்வைக் கொடுக்கிறது.

பெட்ரோலில் எத்தனால் கலப்புத் திட்டத்தின்மூலம், பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் கடந்த 11 ஆண்டுகளில் ரூ.1.44 லட்சம் கோடிக்கும் மேல் அந்நிய செலாவணியை சேமித்துள்ளன. மேலும், 245 லட்சம் டன் கச்சா எண்ணெய் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது. 736 லட்சம் டன் காா்பன் உமிழ்வு குறைக்கப்பட்டுள்ளது.

இது 30 கோடி மரங்களை நட்டதற்கு சமம்.

இ20 பெட்ரோல் திட்டத்தால் இந்த ஆண்டு மட்டும் விவசாயிகளுக்கு ரூ.40,000 கோடிக்கு மேல் பணம் கிடைக்கும், அந்நிய செலாவணி சேமிப்பு ரூ.43,000 கோடியாக இருக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

எத்தனாலின் சராசரி விலை சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலின் விலையை விட அதிகமாக உள்ளது. இதனால், எத்தனால் கலந்த பெட்ரோலின் விலை குறையவில்லை’ என்று தெளிவுபடுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com