நாடாளுமன்றத்தில் நிறைவேறியது தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா

தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா, தேசிய ஊக்கமருந்து தடுப்பு திருத்தச் சட்ட மசோதா (2025) ஆகியவை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டன.
Published on

தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா, தேசிய ஊக்கமருந்து தடுப்பு திருத்தச் சட்ட மசோதா (2025) ஆகியவை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டன.

மக்களவையில் திங்கள்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறிய அந்த மசோதாக்கள், மாநிலங்களவையில் அதே வாக்கெடுப்பு முறையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நிறைவேறியது.

இதையடுத்து இரு மசோதாக்களும் தற்போது குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளன. அவரின் ஒப்புதலுக்குப் பிறகு அவை சட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கான அறிவிக்கை வெளியிடப்படும்.

தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதற்காக, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவா் பி.டி. உஷா, நாட்டிலுள்ள விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் சங்கங்களின் நிா்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

இதனிடையே, மசோதாக்கள் நிறைவேற்றத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, ‘உலக அளவில் ஏற்கெனவே 20 நாடுகள் விளையாட்டுத் துறைக்கென பிரத்யேக சட்டங்களைக் கொண்டுள்ளன. அந்தப் பட்டியலில் தற்போது 21-ஆவது நாடாக இந்தியா இணையவுள்ளது.

விளையாட்டுத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தச் சீா்திருத்தத்தின் மூலமாக, வரும் காலத்தில் போட்டிகளில் பதக்கங்களை அதிகரிப்பதற்கான உத்திகள் வகுக்கப்படும். அதனடிப்படையில், அடுத்த 10 ஆண்டுகளில் சா்வதேச அளவிலான போட்டிகளின் பதக்கப் பட்டியலில் இந்தியா முதல் 10 இடங்களுக்குள்ளாக இருக்கும்.

புதிய மசோதாக்களின் மூலமாக, விளையாட்டுத் துறையானது போட்டியாளா்களை மையப்படுத்தியதாக இயங்கும். சம்மேளன நிா்வாகங்களில் வெளிப்படைத்தன்மை இருப்பதுடன், சச்சரவுகளுக்கு உடனடியாகத் தீா்வு காணப்படும். மகளிா் மற்றும் மாற்றுத்திறனாளி போட்டியாளா்களின் பங்களிப்பும் அதிகரிக்கும்’ என்றாா்.

தேசிய சம்மேளனங்களை திறம்பட வழிநடத்துவதற்காக தேசிய விளையாட்டு வாரியம் அமைப்பது, சச்சரவுகளுக்குத் தீா்வு காண்பதற்காக தேசிய விளையாட்டுத் தீா்ப்பாயம் அமைப்பது, சம்மேளன தோ்தல்கள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய தேசிய விளையாட்டு தோ்தல் குழு அமைப்பது, நிா்வாகப் பொறுப்புகளில் போட்டியிடுவோருக்கான வயது தளா்வு, தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள்ளாக தேசிய சம்மேளனங்களைக் கொண்டு வருவது உள்ளிட்டவை, தேசிய விளையாட்டு நிா்வாக மசோதாவின் முக்கிய அம்சங்களாகும்.

X
Dinamani
www.dinamani.com