
பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வலிமையாக குரல் எழுப்பி வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று(ஆக. 12) அதிர்ச்சியை கிளப்பும் சம்பவம் அரங்கேறியது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரும் வழக்கு விசாரணையில், சமூக ஆர்வலரான யோகேந்திர யாதவ் திடீரென இரு வாக்காளர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினார். அவர்கள் இருவரும் யாரெனில், தேர்தல் ஆணையத்தால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உயிரிழந்துவிட்ட நபர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்கள்.
இதனைத்தொடர்ந்து, கீழ்கண்ட தகவலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜோய்மால்யா பக்சி அமர்வு முன் யோகேந்திர யாதவ் எடுத்துரைத்தார்.
அப்போது அவர்களைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், "ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள இவர்கள், இன்னும் இருக்கிறார்கள். அதை நீங்களே இப்போது நேரில் பார்க்கலாம். அவர்களிடம் ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்களும் இருக்கின்றன. ஆனால், அவற்றையும் மீறி இன்னும் அவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படவில்லை” என்றார்.
இதனைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து வாதிட்ட மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திவிவேதி, இப்படி நீதிமன்ற விசாரணையில் திடீரென இருவர் நேரில் முன்னிலைப்படுத்தப்படுவதை எதிர்த்தார்.
”அவர்கள் இருவரும் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உரிய முறையில் விண்ணப்பித்திருக்கலாமே. வெறும் விளம்பரத்துக்காக யாதவ் அவர்களை இங்கே வரச் செய்திருக்கிறார்” என்றும் குறிப்பிட்டார்.
இதனைத்தொடர்ந்து, நீதிபதி பக்சி குறிப்பிடுகையில், “நிர்வாகச் செயல்பாட்டில் ஏற்பட்ட குழப்பங்களால் இத்தகைய தவறு நேர்ந்திருக்கக்கூடும். அதை சரிசெய்துகொள்ள முடியும்” என்றார்.
இதனிடையே, பிகார் வரைவு வாக்காளர் பட்டியல் விவகார விசாரணையில் மூத்த வழக்குரைஞரும் எம்.பி.யுமான கபில் சிபலின் நீதிமன்ற வாதத்தின்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்ய காந்த், “தேர்தல் ஆணையத்துடன் நீங்கள் ஒத்துப்போக வேண்டும். இப்போது வெளியிடப்பட்டிருப்பது வரைவு வாக்காளர் பட்டியல்தான். அதில் சில தவறுகள் இருக்கலாம். இறந்தவர்கள் இன்னும் இருப்பதாகவும், உயிருடன் இருப்பவர்கள் மறைந்துவிட்டதாகவும் காண்பிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை திருத்த இன்னும் கால அவகாசம் உள்ளது. இது இறுதிப்பட்டியல் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
இதனிடையே, மனுதாரர்கள் தரப்பிலிருந்து வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி சேர்க்கப்படாதவர்களைப் பற்றி தனியாக ஒரு பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தேர்தல் ஆணையம் தரப்பால் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.