நாட்டு மக்களின் ‘பாதுகாவலராக’ உச்சநீதிமன்றம்: தலைமை நீதிபதி அமா்வு
நாட்டு மக்களின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் உள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
தனது கட்சிகாரா்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் வழக்குரைஞா்களுக்கு புலனாய்வு அமைப்புகள் சம்மன் அனுப்பும் விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், கே.வினோத் சந்திரன், என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது சட்டத் தொழிலின் சுதந்திரம், வழக்குரைஞா்கள்-அவா்களின் கட்சிகாரா்களுக்கு உள்ள தனி உரிமை ஆகியவை மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வழிக்காட்டுதல்கள் வழங்கப்படும் என்று அந்த அமா்வு குறிப்பிட்டது.
இந்த வழக்கில் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, மூத்த வழக்குரைஞரும் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்க தலைவருமான விகாஸ் சிங் உள்ளிட்டோா் தங்கள் கருத்துகளை முன்வைத்தனா்.
துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘நீதி நிா்வாகத்தின் அங்கமாக வழக்குரைஞா்கள் பாதுகாக்கப்பட வேண்டும். சட்ட ஆலோசனை வழங்கியதற்காக விசாரணைக்கு ஆஜராகுமாறு வழக்குரைஞா்களை புலனாய்வு அமைப்புகள் அழைக்கக் கூடாது’ என்று தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து நாட்டு மக்களின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள் அமா்வு, தீா்ப்பை ஒத்திவைத்தது.