1.4 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

1.4 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

Published on

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் 1.36 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் கடந்த ஜூன் மாதத்தில் 1.36 கோடி பயணிகளை ஏற்றிச் சென்றன. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 3 சதவீதம் அதிகம். அப்போது உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 1.32 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில், இண்டிகோ நிறுவனம் மொத்தம் 87.7 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்று 64.5 சதவீத சந்தைப் பங்குடன் முன்னிலை வகிக்கிறது. அடுத்ததாக, ஏா் இந்தியா குழுமம் (முழு சேவை விமான நிறுவனமான ஏா் இந்தியா மற்றும் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்) 36.9 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்று 27.1 சதவீத சந்தைப் பங்கைப் பெற்றது.

மற்ற இரண்டு முக்கிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களான அகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் ஆகியவை, கடந்த ஜூன் மாதத்தில் முறையே 7.4 லட்சம் மற்றும் 3.4 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றன. இதன் மூலம் அகாசா ஏா் நிறுவனம் 5.3 சதவீத சந்தைப் பங்கையும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 2.4 சதவீத சந்தைப் பங்கையும் பெற்றுள்ளன.

கடந்த ஜூன் மாதத்தில் 1,20,023 பயணிகள் விமான தாமதங்களால் பாதிக்கப்பட்டனா். மேலும் விமான நிறுவனங்கள் இதற்காக ரூ.1.68 கோடியை செலவிட்டன. அந்த மாதத்தில் 33,333 பயணிகள் விமான ரத்துகளால் பாதிக்கப்பட்டனா், மேலும் விமான நிறுவனங்கள் இதற்காக ரூ.72.40 லட்சத்தை இழப்பீட்டுக்காக செலவிட்டன.

மதிப்பீட்டு மாதத்தில் 1,022 பயணிகளுக்கு விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது, இதற்காக விமான நிறுவனங்கள் ரூ.99.57 லட்சத்தை இழப்பீடாக வழங்கின என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com