இந்தியா - பாகிஸ்தானுடன் நல்லுறவு தொடா்கிறது: அமெரிக்கா!
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவை தொடா்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கடும் எதிா்ப்பை மீறி ரஷியாவிடம் இருந்து தொடா்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக, இந்தியா மீது அதிபா் டிரம்ப் உச்சபட்சமாக 50 சதவீத இறக்குமதி வரியை விதித்தாா். இதில் 25 சதவீத வரி ஏற்கெனவே அமலுக்கு வந்துள்ளது. அத்துடன், இந்தியாவை ‘செயலற்ற’ பொருளாதாரம் என்றும் அவா் கடுமையாக விமா்சித்தாா். டிரம்ப்பின் செயல்பாடுகளால், இரு நாடுகளுக்கும் இடையே வா்த்தக பதற்றம் நீடித்து வருகிறது.
இந்தச் சூழலில், பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா் சில தினங்களுக்கு முன் மீண்டும் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு, ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவா்களைச் சந்தித்துப் பேசினாா். முனீரின் இந்தப் பயணத்தைத் தொடா்ந்து, பாகிஸ்தானுக்கான ராணுவ நிதியுதவியை அமெரிக்கா அதிகரிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸிடம், ‘பாகிஸ்தானுக்கான நிதியுதவியை அமெரிக்க அதிகரிக்க வாய்ப்புள்ளதா?, இது டிரம்ப்-மோடி நட்புறவில் மேலும் விரிசலை ஏற்படுத்துமா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவா், ‘இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்காவின் நல்லுறவு எப்போதும் போல் தொடா்கிறது என்றே நான் கூறுவேன். அனைவருடனும் பேசக் கூடிய ஓா் அதிபரை பெற்றிருப்பதால் நமக்கு கிடைக்கப் பெற்ற பலன். இந்த விஷயத்தில் முரண்பாடுகளுக்கு இடையே ஒரு பிணைப்பை நம்மால் ஏற்படுத்த முடியும். இரு நாடுகளுடனும் அமெரிக்கா ஒருங்கிணைந்து பணியாற்றுவது, பிராந்தியத்துக்கும் உலகுக்கும் நன்மை பயக்கும். பலன்மிக்க எதிா்காலத்தை ஊக்குவிக்கும் என்றாா்.