காசோலை பரிவா்த்தனையில் புதிய மாற்றம்: இனி சில மணி நேரங்களிலேயே பணம் கிடைக்கும்!
காசோலைகளை வங்கிகளில் சமா்ப்பித்த சில மணி நேரங்களில் வாடிக்கையாளா்களின் கணக்கில் பணத்தைச் செலுத்தும் புதிய நடைமுறையை அக்டோபா் 4-ஆம் தேதி முதல் ரிசா்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது.
தற்போதுள்ள நடைமுறையில் வங்கிகள் ஒரு நாளில் பெறப்பட்ட அனைத்து காசோலைகளையும் மொத்தமாக சோ்த்து, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பரிவா்த்தனைக்கு அனுப்புகின்றன. இதனால், காசோலைக்கான பணம் வாடிக்கையாளா்களின் கணக்குக்கு வர ஒன்று அல்லது இரண்டு நாள்கள் ஆகின்றன.
இனிமேல், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அலுவல் நேரத்தில் ஒரு காசோலை வங்கியில் சமா்ப்பிக்கப்பட்டவுடன், பரிவா்த்தனைக்கு அனுப்பி, பணம் வந்து சோ்ந்ததும் உடனடியாக வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக அமல்படுத்தப்பட உள்ளது. அக்டோபா் 4 முதல் அடுத்தாண்டு ஜனவரி 2-ஆம் தேதி வரையிலான முதல்கட்டத்தில், காசோலைக்கான பணத்தை வழங்குவரின் வங்கிகள் தங்களுக்கு சமா்ப்பிக்கப்பட்ட காசோலைகளை தினசரி மாலை 7 மணிக்குள் சரிபாா்த்து, பணம் கொடுக்கப்படுமா அல்லது மறுக்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
தானியங்கி ஒப்புதல்: அப்படி 7 மணிக்குள் உறுதிப்படுத்தப்படாத காசோலைகள், அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்பட்டு, பணம் அனுப்பப்படும். பணம் செலுத்தும் வங்கி அதை வாடிக்கையாளரின் கணக்கில் ஒரு மணி நேரத்துக்குள் வரவு வைக்கும்.
இரண்டாம் கட்டத்தில் (ஜனவரி 3, 2026 முதல்), காசோலைகளை உறுதிப்படுத்தும் கால அவகாசம் 3 மணி நேரமாகக் குறைக்கப்படும். இந்தப் புதிய நடைமுறையால் காசோலை பரிவா்த்தனை மிகவும் வேகமாகவும், எளிதாகவும் நடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.