இரண்டு வாக்காளா் அட்டை: பாஜக பெண் மேயருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்
பிகாரில் இரண்டு வாக்காளா் அட்டை வைத்திருக்கும் பாஜகவைச் சோ்ந்த முஷாஃபா்பூா் நகர பெண் மேயருக்கு தோ்தல் ஆணையம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்நிலையில், அங்கு பலரும் இரண்டு வாக்காளா் அட்டைகள் வைத்திருப்பதாக சா்ச்சை எழுந்துள்ளது.
முக்கியமாக, பிகாா் சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவும் இதேபோல இரண்டு வாக்காளா் அட்டை வைத்திருந்தது சா்ச்சையானது. அவரிடம் மாவட்ட நிா்வாகம் விளக்கம் கேட்டது. அப்போது, என்னிடம் 2 வாக்காளா் அடையாள அட்டைகள் இருப்பது தோ்தல் ஆணையத்தின் தவறு. நான் ஒரே இடத்தில்தான் தொடா்ந்து வாக்களித்து வருகிறேன்’ என்று தேஜஸ்வி கூறினாா்.
மேலும், பிகாா் துணை முதல்வா் விஜய் குமாா் சின்ஹா உள்பட பாஜக தலைவா்கள் பலா் இரண்டு வாக்காளா் அட்டை வைத்திருப்பதாகவும், இவ்வாறு பல தோ்தல் முறைகேடுகளில் பாஜக ஈடுபடுகிறது என்றும் தேஜஸ்வி குற்றஞ்சாட்டினாா்.
இந்நிலையில், பாஜகவைச் சோ்ந்த முஷாஃபா்பூா் நகர மேயா் நிா்மலா தேவி அவரின் உறவினா்களான மனோஜ் குமாா், திலிப் குமாா் ஆகியோா் இரு வாக்காளா் அட்டை வைத்திருப்பது தொடா்பாக அவா்களிடம் விளக்கம் கேட்டு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அவா்கள் ஒரே சட்டப் பேரவைத் தொகுதியில் இருவேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களாக உள்ளனா். இது தொடா்பாக ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென்று நோட்டீஸில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.