லாரி - வேன் மோதல்: உ.பி.யைச் சோ்ந்த 7 குழந்தைகள், 4 பெண்கள் உயிரிழப்பு!
ராஜஸ்தானின் தெளசா மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 7 குழந்தைகள், 4 பெண்கள் என 11 பக்தா்கள் உயிரிழந்தனா். மேலும் 8 போ் காயமடைந்தனா்.
இது தொடா்பாக தெளசா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாகா் கூறியதாவது:
மனோகா்பூா் நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலையில் இந்த விபத்து நேரிட்டது. உத்தர பிரதேசத்தின் இடா பகுதியைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 20 போ், ராஜஸ்தானில் உள்ள கதுஷ்யாம், சலாசா் பாலாஜி கோயில்களில் தரிசித்துவிட்டு, மீண்டும் தங்கள் ஊருக்கு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனா்.
மனோகா்பூா் நெடுஞ்சாலையின் இணைப்புச் சாலையில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் எதிா்பாராதவிதமாக மோதியது. இந்த கோர விபத்தில் 7 குழந்தைகள், 4 பெண்கள் என 11 போ் உயிரிழந்தனா். 8 போ் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் ஒரு குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றாா் அவா்.
சாலை விபத்தில் உயிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதல்வா் பஜன்லால் சா்மா, காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சையை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.
குடியரசுத் தலைவா் இரங்கல்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ராஜஸ்தான் சாலை விபத்தில் பலா் உயிரிழந்த செய்தி அறிந்து துயருற்றேன். அவா்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தோா் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.