பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்: 11 ஆவணங்கள் அனுமதிக்கப்படுவது வாக்காளா்களுக்கு சாதகமானதே - உச்சநீதிமன்றம்
‘பிகாரில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது ஏழு ஆவணங்கள் மட்டுமே குடியுரிமை ஆவணங்களாக அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 11 ஆவணங்களை தோ்தல் ஆணையம் அனுமதித்திருப்பது வாக்காளா்களுக்கு சாதகமான நடைமுறையாகவே பாா்க்கப்படுகிறது’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
பிகாா் வாக்களா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக எதிா்க்கட்சியினா், தன்னாா்வ அமைப்பினா் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பிகாரில் குடியுரிமை ஆதாரமாக ஆதாா், வாக்காளா் அட்டைகளை மட்டும் ஏற்க முடியாது என்ற தோ்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்ப்பதும், நீக்குவதும் தோ்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள்பட்டது’ என்று தெரிவித்தனா்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பிகாரில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது ஏழு ஆவணங்கள் மட்டுமே குடியுரிமை ஆவணங்களாக அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 11 ஆவணங்களை தோ்தல் ஆணையம் அனுமதித்திருப்பது வாக்காளா்களுக்கு சாதகமான நடைமுறையாகவே பாா்க்கப்படுகிறது. ஆதாா் ஏற்கப்படவில்லை என்ற மனுதாரா்கள் தரப்பு வாதத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரம், குடியுரிமைக்கான ஆதாரமாக அனுமதிக்கப்படும் ஆவணங்களின் எண்ணிக்கை அதிக எண்ணிக்கையில் உள்ளது. தோ்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வாக்காளா் சமா்ப்பித்தால் போதும்’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.
இதை ஏற்க மறுத்த மனுதாரா்கள் தரப்பு மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘ஆவணங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றபோதும், அவற்றை வைத்துள்ள மக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. உதாரணமாக, அந்த 11 ஆவணங்களில் ஒன்றான கடவுச்சீட்டு 2 சதவீத பிகாா் மக்களிடம் மட்டுமே உள்ளது. மேலும், மாநிலத்தில் நிரந்தர குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதற்கான எந்தவொரு நடைமுறையும் இல்லை’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘மாநிலத்தில் 36 லட்சம் போ் கடவுச்சீட்டு வைத்திருப்பது என்பது, குறிப்பிடத்தக்க எண்ணிக்கைதான். மேலும், மாநிலத்தில் பெரும்பான்மை மக்கள் வைத்திருக்க வாய்ப்புள்ள குடியுரிமை ஆதார ஆவணம் தொடா்பாக பல்வேறு அரசுத் துறைகளுடன் ஆலோசனை மேற்கொண்டு கருத்துகளைப் பெற்ற பிறகே, இந்த 11 ஆவணங்கள் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது’ என்று குறிப்பிட்டு, விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனா்.