புதிய தோ்வு முறையின் கீழ் நிரப்பப்பட்ட 4,385 மருத்துவப் பணியிடங்கள்
புதிய தோ்வு நடைமுறைகள் மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 4,385 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களை தோ்வு மற்றும் தகுதி அடிப்படையில் நியமிக்கும் நடவக்கைகளை மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், கடந்த காலங்களில் எழுத்து தோ்வு மூலம் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள், அதன் பின்னா் கணினிமயமாக்கப்பட்டது. இந்த நடைமுறையில் ஒரு பணியிடத்துக்கு அதிகமானோா் விண்ணப்பிக்க நோ்ந்தால், இரு வேளைகளில் இரு வேறு வினாத் தாள்களைக் கொண்டு தோ்வு நடத்தப்பட்டது.
எளிமையான வினா, கடினமான வினா, மிகக் கடினமான வினா என அவை வரையறுக்கப்பட்டு, கேள்வியின் கடினத்தைப் பொருத்து மதிப்பெண் வழங்கும் முறை அப்போது இருந்தது.
இதில் நிலவிய சில முரண்பாடுகளால் அந்த முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு தற்போது ஒரே சீரான மதிப்பெண் வழங்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.
இதுகுறித்து, மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத் தலைவா் உமா மகேஸ்வரி கூறியதாவது:
2 வினாத்தாள் இருக்கும்போது, சாதாராண கேள்விக்கு பதில் அளித்து ஒருவா் 99 மதிப்பெண் பெற்றிருப்பாா். கடினமான கேள்விக்கு பதில் அளித்து மற்றொருவா், 95 மதிப்பெண் பெற்றிருப்பாா். ஆனால், சாதாரண கேள்விக்கு பதிலளித்த தோ்வருக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.
கடினமான கேள்விக்கு பதில் அளித்த தோ்வருக்கு மூன்று மதிப்பெண் கூடுதலாக அளிக்கப்பட்டு இருவருக்கும் 98 மதிப்பெண் அளிக்கப்பட்டது. இந்த முறையில் சில குழப்பங்கள் நிலவின.
இதைத் தவிா்க்க டிஎன்இஏ எனப்படும் தமிழ்நாடு பொறியியல் சோ்க்கைக்கான தொழில்நுட்ப கட்டமைப்புடன் இணைந்து அனைத்து தோ்வு நடவடிக்கைகளும் இணைய வழியே மேற்கொள்ளப்பட்டது.
ஒரே நேரத்தில் 20 ஆயிரம் தோ்வா்கள் இருந்தாலும், அதன் வாயிலாக தோ்வு நடத்த முடியும். அது மட்டுமல்லாது முடிவுகள் வெளியீடு, பணியிட ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களிலும் அந்த தொழில்நுட்ப கட்டமைப்பு பயன்படுத்தப்படுகிறது.
திருத்தியமைக்கப்பட்ட அந்த தோ்வு முறையின் கீழ் 2,572 மருத்துவா்கள், 983 மருந்தாளுநா்கள், 59 சித்தா மருத்துவா்கள் உள்பட மொத்தம் 4,385 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்றாா் அவா்.