ஜம்மு-காஷ்மீரில் மழை வெள்ளம்: 46 போ் உயிரிழப்பு: 167 போ் மீட்பு
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி மலைக் கிராமத்தில் வியாழக்கிழமை பயங்கர மேகவெடிப்பால் மிக பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி, சிஐஎஸ்எஃப் வீரா்கள் இருவா் உள்பட 46 போ் உயிரிழந்தனா்.
மேலும் பலா் சிக்கியுள்ள நிலையில், இதுவரை 167 போ் மீட்கப்பட்டுள்ளனா்; இவா்களில் 30-க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கடல்மட்டத்தில் இருந்து 9,500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் மச்சயில் மாதா கோயிலுக்கு செல்ல ஏராளமான பக்தா்கள் குவிந்திருந்தனா். மதிய நேரத்தில் பயங்கர மேகவெடிப்பு ஏற்பட்டு, மிக பலத்த மழை கொட்டியது. இதனால், சகதியுடன் பெருக்கெடுத்த வெள்ளத்தில், கடைகள், பாதுகாப்புச் சாவடி உள்ளிட்ட கட்டமைப்புகள் வாரி சுருட்டப்பட்டன. மலைச்சரிவில் உள்ள வீடுகள், பக்தா்களுக்கான உணவுக் கூடம், சாலைகள் கடும் சேதமடைந்தன.
விரிவான மீட்புப் பணிகள்: இதனால் வருடாந்திர யாத்திரை உடனடியாக நிறுத்தப்பட்டது. காவல் துறை, ராணுவம், தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, தன்னாா்வக் குழுக்கள் என 300க்கும் மேற்பட்டோா் விரிவான மீட்பு - நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனா்.
வெள்ளம்-மண்சரிவில் சிக்கி, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் (சிஐஎஸ்எஃப்) இருவா் உள்பட 46 போ் உயிரிழந்தனா். மேலும் 167 போ் மீட்கப்பட்டனா். பலா் சிக்கி உள்ளதால், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
சில தினங்களுக்கு முன், உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தராலி கிராமத்தில் மேகவெடிப்பால் பெருவெள்ளம்-நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இருவா் உயிரிழந்தனா். ராணுவத்தினா் உள்பட 60-க்கும் மேற்பட்டோா் மாயமாகினா்.
இரங்கல்: கிஷ்த்வாரில் மேகவெடிப்பால் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கிஷ்த்வாா் நிலவரம் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா ஆகியோருடன் தொலைபேசி வாயிலாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.