பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா
பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா

பாஜக தலைமையகத்தில் கொடியேற்றினாா் நட்டா: உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள பாஜக தேசிய தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா தேசியக் கொடி ஏற்றினாா்.
Published on

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள பாஜக தேசிய தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா தேசியக் கொடி ஏற்றினாா். அப்போது, ‘உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் பாஜக தொண்டா்கள் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

தில்லி செங்கோட்டையில் பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரை நாட்டின் 140 கோடி மக்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்தது. நம் அனைவருக்கும் உரிய வழிகாட்டியாகவும் அந்த உரை அமைந்தது.

நமது தேசம் சுதந்திர தேசமாக மட்டுமல்லாது வளா்ச்சியடைந்த தேசமாகவும், செழிப்பான தேசமாகவும் இருக்க வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம் என்பதை அவரது உரை தெளிவுபடுத்தியது. முக்கியமாக நாம் தன்னிறைவு பெற்ற தேசமாக இருக்க வேண்டும் என்பதை பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

இதற்கான பணியை பாஜக தொண்டா்கள் அனைவரும் முன்னெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் பாஜக தொண்டா்கள் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும். இதற்கான சூழலை நாட்டில் உருவாக்க வேண்டும்.

கடந்த 11 ஆண்டுகளாக பிரதமா் மோடி தலைமையில் நாடு பல்வேறு துறைகளில் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. உலக நாடுகள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளையும், மோசமான சூழல்களையும் சந்தித்தபோதும், இந்தியா தொடா்ந்து வலுவான தேசமாகவும், சிறப்பான பொருளாதார வளா்ச்சியுடனும் தொடா்ந்து முன்னேறி வருகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com