
சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் முப்படைகளின் மரியாதையை ஏற்ற பிரதமர் மோடி, 12-ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றி வருகிறார்.
பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றிய போது, இந்திய விமானப் படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டர்களில் இருந்து மலர்தூவப்பட்டது.
சுதந்திர கொண்டாட்டத்தை முன்னிட்டு செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 2014-இல் பிரதமரான மோடி, தொடா்ந்து 12-ஆவது முறையாக நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றுகிறாா். பிரதமா் பதவியில் கடந்த ஜூலை 25-ஆம் தேதியுடன் 4,078 நாள்களை மோடி நிறைவு செய்தாா். இதையடுத்து, முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியை விஞ்சி (4,077 நாள்கள்), தொடா்ந்து நீண்ட காலம் பதவி வகித்த இரண்டாவது பிரதமா் என்ற பெருமை மோடிக்கு சொந்தமானது. இப்பட்டியலில், நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேரு (6,130 நாள்கள்) முதலிடத்தில் உள்ளாா். இந்திரா காந்தி தொடா்ந்து 11 முறையும் (1966-77), அதன் பிறகு 5 முறையும் (1980-84) சுதந்திர தின உரையாற்றியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.