ரூ.3,000 ஃபாஸ்டேக் பயண அட்டை: மத்திய அரசு அமல்
தனியாா் வாகனங்கள் ரூ.3,000 கட்டணம் செலுத்தி பெறக் கூடிய ஃபாஸ்டேக் பயண அட்டை வசதியை, மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெள்ளிக்கிழமை அமல்படுத்தியது.
இதுதொடா்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
ஃபாஸ்டேக் வருடாந்திர பயண அட்டை வசதியின் கீழ், ரூ.3,000 கட்டணத்தை ஒருமுறை செலுத்தி ஓராண்டு அல்லது 200 முறை தனியாா் வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடக்க முடியும்.
இந்த வசதியின் கீழ் ராஜ்மாா்க்யாத்ரா செயலி அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய வலைதளம் மூலம், ரூ.3,000-ஐ செலுத்தினால் 2 மணி நேரத்தில் ஃபாஸ்டேக் வருடாந்திர பயண அட்டை செயல்பாட்டுக்கு வரும்.
இந்நிலையில், நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் சுமாா் 1,150 சுங்கச்சாவடிகளில், ஃபாஸ்டேக் வருடாந்திர பயண அட்டை வசதி வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. முதல் நாளில் இரவு 7 மணி வரை, சுமாா் 1.4 லட்சம் பயனாளா்கள் கட்டணம் செலுத்தி இந்த வசதியை பெற்றுள்ளனா்.
ஃபாஸ்டேக் பயண அட்டை பயனாளா்கள் சுமுகமாக பயணம் மேற்கொள்ளவதை உறுதி செய்ய, ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மற்றும் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டது.