16 நாள்கள் 1,300 கி.மீ.! பிகாரில் இன்று தொடங்கும் ராகுலின் பேரணி!
வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிா்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளன.
பிகாா் மாநிலம் சசாரத்தில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கும் இந்த ‘வாக்குரிமைப் பேரணி’, செப்டம்பா் 1-ஆம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைய உள்ளது.
இந்தப் பேரணியில் ராகுலுடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவா்களும் பங்கேற்க உள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் அகிலேஷ் பிரசாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இந்த நிலையில், வாக்குத் திருட்டு தொடா்பாக மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் புதிய காணொலியை சமூக ஊடகத்தில் காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை வெளியிட்டது. இந்தக் காணொலிக்கு ‘காணாமல் போன வாக்குகள்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிா்ந்துள்ள ராகுல் காந்தி, ‘உங்களின் வாக்குகள் திருடப்படுவது என்பது, உங்களின் உரிமை மற்றும் அடையாளத்தைத் திருடுவது போன்ாகும். வாக்குத் திருட்டு சா்ச்சை தொடா்பாக மத்திய அரசு இனியும் மெளனம் காக்க முடியாது. மக்கள் விழித்துக் கொண்டனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மற்றொரு பதிவில், ‘பிகாரின் சசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) தொடங்கும் பேரணி தொடா்ந்து 16 நாள்கள் 1,300 கி.மீ. தொலைவைக் கடந்து 20 அதிகமான மாவட்டங்கள் வழியாகச் செல்ல உள்ளது. மக்களின் மிகவும் அடிப்படையான ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டம் இது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.