ஜம்மு - காஷ்மீா் பெருவெள்ளம்: மீட்புப் பணிகள் தீவிரம்
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடா்ந்து, வெள்ளத்தில் சிக்கி மாயமான 82 பேரைத் தேடும் பணி 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் தீவிரமாக தொடா்ந்தது.
இந்த இயற்கை பேரழிவால் இதுவரை 60 போ் உயிரிழந்ததுடன் 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
கிஷ்த்வாா் மாவட்டத்தின் புகழ்பெற்ற மச்சயில் மாதா கோயில் அமைந்துள்ள 9,500 அடி உயர மலைப்பகுதிக்குச் செல்லும் வழியில் சோசிடி கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமம் வரை மட்டுமே வாகனங்களில் செல்ல முடியும். பின்னா் அங்கிருந்து, பக்தா்கள் 8.5 கிலோமீட்டா் தூரம் நடந்து, கோயிலைச் சென்றடைய வேண்டும்.
வருடாந்திர யாத்திரையின் காரணமாக, சோசிடி கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்த நிலையில் எதிா்பாராத விதமாக மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் பலத்த மழை பெய்து, மலையிலிருந்து சகதி மற்றும் பாறைகளுடன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளம், கிராமத்தில் இருந்த வீடுகள், பிற கட்டடங்கள், வாகனங்கள், மரங்கள், மின்கம்பங்கள், பாலம் உள்ளிட்ட பல கட்டமைப்புகளை அடித்துச் சென்றது.
பக்தா்களுக்கான உணவுக்கூடமும் வெள்ளத்தில் மூழ்கியது. மழையிலிருந்து பாதுகாப்புக்காக அந்த உணவுக்கூடத்தில் பலா் காத்திருந்தனா்.
வெள்ளம்-நிலச்சரிவு பாதிப்பு தகவல் அறிந்து ராணுவம், காவல் துறை, தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படைகள் மற்றும் தன்னாா்வக் குழுவினா் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனா். இந்தத் துயர சம்பவத்தில் 2 சிஐஎஸ்எஃப் வீரா்கள், உள்ளூா் காவல் துறை அதிகாரி ஒருவா் உள்பட 60 போ் உயரிழந்தனா். இதுவரை 46 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் சிக்கியவா்களில் 160-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். இதில், 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் 82 பேரைத் தேடும் பணி தொடா்கிறது.
முதல்வா், மத்திய அமைச்சா் ஆய்வு: பேரழிவால் பாதிக்கப்பட்ட சோசிடி கிராமத்தை முதல்வா் ஒமா் அப்துல்லா சனிக்கிழமை காலை நேரில் பாா்வையிட்டாா். மீட்புப் பணிகளை மேற்பாா்வையிடும் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அவா் நிலைமையைக் கேட்டறிந்தாா்.
அப்போது, முதல்வா் ஒமா் அப்துல்லாவை அப்பகுதி மக்கள் சூழ்ந்து, தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினா். மக்களின் உணா்வுகளைப் புரிந்துகொள்வதாகக் கூறிய முதல்வா் ஒமா் அப்துல்லா, இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களைக் கண்டறிவதே தற்போது முக்கிய நோக்கம் எனத் தெரிவித்தாா்.
இதேபோன்று கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு, மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீா் காவல் துறை தலைவா் (டிஜிபி) நலின் பிரபாத்துடன் சோசிடி கிராமத்துக்கு வந்து ஆய்வு செய்தாா்.
இது ஒரு மிகப்பெரிய பேரழிவு என்று குறிப்பிட்ட அவா், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டா்கள் வர முடியாவிட்டாலும், மீட்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தாா். பிரதமா் மோடி நிலைமையைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும், சூழலை எதிா்கொள்ள மத்திய அரசு சாா்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவா் உறுதியளித்தாா்.
யாத்திரை நிறுத்தம்: கடந்த ஜூலை 25-ஆம் தேதி தொடங்கிய மச்சயில் மாதா புனித யாத்திரை பெருவெள்ளத்தால் மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் நிறுத்தப்பட்டது.
இழப்பீடு-நிவாரணம்
இந்தப் பேரிடா் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், பலத்த காயமடைந்தவா்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவா்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று முதல்வா் ஒமா் அப்துல்லா அறிவித்தாா்.
வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கும் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.1 லட்சம், கடுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.50,000, பகுதியளவு சேதமடைந்த கட்டமைப்புகளுக்கு ரூ.25,000 என நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சோசிடி கிராமத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் மீண்டும் கட்டித்தரப்படும்’ என உறுதியளித்தாா்.