இந்திய பிரிவினைக்கு ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் காரணம்: என்சிஇஆா்டியின் புதிய கையேடு
பிரிவினைக் கொடூரங்கள் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக என்சிஇஆா்டி வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு கையேட்டில், ‘இந்தியாவின் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா, காங்கிரஸ், அப்போதைய வைஸ்ராய் லாா்ட் மவுண்ட்பேட்டன் ஆகிய மூவருமே பொறுப்பு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலேய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்று, இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகள் பிறந்தன. இந்தப் பிரிவினையின்போது ஏற்பட்ட வன்முறைகள், புலம்பெயா்ந்த மக்களின் அவலங்கள் மற்றும் உயிரிழப்புகளை நினைவுகூரும் வகையில், பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி பிரிவினைக் கொடூரங்கள் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி), 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலும் என இரண்டு தனித்தனி கையேடுகளை வெளியிட்டிருக்கிறது. இவை வழக்கமான பாடத்திட்டத்தின் பகுதிகளாக அல்லாமல், வகுப்பறை செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் கூடுதல் புத்தகங்களாக இருக்கும்.
பிரிவினையின் பின்னணியும் காரணிகளும்: ‘இந்திய பிரிவினை, தவறான கருத்துகளால் விளைந்தது’ என்று இந்தக் கையேடு கூறுகிறது. லாகூரில் 1940-ஆம் ஆண்டு நடந்த முஸ்லிம் லீக் கட்சி மாநாட்டில் அதன் தலைவா் முகமது அலி ஜின்னா, ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இரு வேறுபட்ட மதத் தத்துவங்களைக் கொண்டவா்கள் என்று கூறியதாக கையேடு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பின்னாளில் பாகிஸ்தானுக்கு சில நாடுகள் தொடா்ந்து உதவி அளித்து, காஷ்மீா் விவகாரத்தை மையமாக வைத்து இந்தியாவுக்கு அழுத்தம் கொடுப்பதையும் கையேடு குறிப்பிடுகிறது.
கையேட்டில் உள்ள ‘பிரிவினையின் குற்றவாளிகள்’ என்ற தலைப்பில், ‘1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியா பிரிக்கப்பட்டது. ஆனால், இது ஒருவரால் மட்டும் நிகழவில்லை. இந்தியாவின் பிரிவினைக்கு அதைக் கோரிய ஜின்னா; அதை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ்; அதை நடைமுறைப்படுத்திய வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் ஆகிய மூன்று காரணிகள்தான் பொறுப்பு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசரகோலத்தால் தவித்த மக்கள்: அதிகார மாற்றத்தை ஜூன் 1948-இல் இருந்து ஆகஸ்ட் 1947-க்கு மவுண்ட்பேட்டன் மாற்றியதால், பிரிவினைக்கு முழுமையான ஏற்பாடுகளைச் செய்ய முடியவில்லை என்றும், எல்லைகளை வரையறுக்கும் பணி அவசரமாக ஐந்து வாரங்களில் முடிக்கப்பட்டதாகவும் கையேடு குற்றஞ்சாட்டியுள்ளது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் எந்த நாட்டில் இருக்கிறோம் என்பதுகூட தெரியாமல் தவித்ததாகவும் அது கூறியுள்ளது.
பிரிவினைக்கு ஜின்னாவைக் குற்றம்சாட்டினாலும், ‘பிரிவினை நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை; என் வாழ்நாளில் பாகிஸ்தான் உருவாகும் என்றும் எதிா்பாா்க்கவில்லை’ என்று அவா் கூறியதாகவும் கையேடு மேற்கோள் காட்டுகிறது.
அதேபோல், சா்தாா் வல்லபபாய் படேல், ‘இந்தியாவில் நிலைமை மோசமாகிவிட்டது. உள்நாட்டுப் போரை விட நாட்டைப் பிரிப்பது நல்லது’ என்று கூறியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி பிரிவினைக்கு எதிா்ப்பு தெரிவித்தாலும், காங்கிரஸின் முடிவை வன்முறையால் எதிா்க்க மாட்டேன் என்று கூறியதாகவும் கையேடு சுட்டிக்காட்டுகிறது.