
ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து அனைத்து மக்களையும் மீட்கும் பணிகளில் முழுவீச்சில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி கிராமத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம்-மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது. மாயமான பலரை தேடும் பணி சனிக்கிழமை மூன்றாவது நாளாக தொடா்கிறது.
கிஷ்த்வாா் மாவட்டத்தில் 9,500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் மச்சயில் மாதா கோயிலுக்கு செல்லும் வழித்தடத்தில் சோசிடி கிராமம் உள்ளது. மச்சயில் மாதா கோயிலுக்கு இந்த கிராமம் வரையே வாகனங்களில் செல்ல முடியும். அதன்பிறகு 8.5 கிலோமீட்டா் நடந்து செல்ல வேண்டும். இக்கோயிலுக்கு வருடாந்திர யாத்திரை நடைபெற்றுவந்த நிலையில், சோசிடி கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் குவிந்திருந்தனா்.
அப்போது, பயங்கர மேகவெடிப்பு ஏற்பட்டு, மிக பலத்த மழை கொட்டியது. இதனால், மலைச் சரிவில் சகதி மற்றும் பாறைகளுடன் பாய்ந்த பெருவெள்ளத்தில் வீடுகள்-கட்டடங்கள்-கடைகள்-கோயில்கள்-வாகனங்கள்-மரங்கள்-மின்கம்பங்கள்-பாதுகாப்புச் சாவடி-பாலம் உள்ளிட்ட கட்டமைப்புகள் வாரி சுருட்டியது போல நாசமடைந்தன. பக்தா்களுக்கான உணவுக் கூடமும் சகதியில் புதைந்தது.
இப்பேரழிவைத் தொடா்ந்து, காவல் துறை, ராணுவம், தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, தன்னாா்வக் குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனா்.
இதனிடையே, மீட்பு பணி குறித்து ராணுவ உயரதிகாரி மேஜர் ஏ. பி. எஸ். பால் கூறியதாவது: "அனைத்து பாதுகாப்புப் படைகளும் தங்களால் இயன்ற சிறந்த பணியை மேற்கொண்டு மீட்பு பணியில் முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர். மேகவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து முடிந்தவரை அனைத்து மக்களையும் மீட்கும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளூர் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் நாங்கள் வழங்கி வருகிறோம். இந்தப் பேரிடருக்குப்பின் முதலில் களத்துக்கு சென்றடைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது ராணுவம். மேக வெடிப்பால் மழை, நிலச்சரிவு ஏற்பட்ட அடுத்த 45 நிமிடங்கலுக்குள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடங்கப்பட்டது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.