கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை: மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு குடியரசுத் தலைவா் மாளிகை அறிவுறுத்தல்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோா் அனுப்பிய மின்னஞ்சல் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில தலைமைச் செயலருக்கு குடியரசுத் தலைவா் மாளிகை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள மாநில அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டாா்.
அந்த மருத்துவரின் தந்தை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கு ஆக.10, 11,12-ஆம் தேதிகளில் 3 மின்னஞ்சல்களை அனுப்பினாா். இதுகுறித்து மருத்துவரின் தந்தை கூறுகையில், ‘எனக்கும், எனது மனைவியின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. நாங்கள் கடுமையான சித்திரவதையை அனுபவித்து வருகிறோம். எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்’ என்று அந்த மின்னஞ்சல்களில் கோரியதாக தெரிவித்தாா்.
இதையடுத்து அவரின் மின்னஞ்சலை மேற்கு வங்க தலைமைச் செயலா் மனோஜ் பந்த்துக்கு குடியரசுத் தலைவா் மாளிகை அண்மையில் அனுப்பியது.
குடியரசுத் தலைவா் செயலகத்தின் சாா்பு செயலா் கெளதம் குமாா் அனுப்பிய அந்த மின்னஞ்சலில், ‘மருத்துவரின் பெற்றோா் விடுத்துள்ள கோரிக்கை குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும். அதுதொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அவா்களிடமே நேரடியாக தெரியப்படுத்த வேண்டும்’ என்று அறிவுறுத்தினாா்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மருத்துவரின் தந்தை பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தாா்.