இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

உரிய நேரத்தில் வாக்காளா் பட்டியல்களை சில கட்சிகள் ஆராயவில்லை: தோ்தல் ஆணையம்

Published on

சில அரசியல் கட்சிகளும், அவற்றின் வாக்குச்சாவடி நிலை முகவா்களும் வாக்காளா் பட்டியல்களை உரிய நேரத்தில் ஆராய்ந்து, அவற்றில் உள்ள பிழைகளை வாக்காளா் பதிவு அலுவலா்கள், மாவட்ட தோ்தல் அதிகாரிகள் அல்லது தலைமை தோ்தல் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டாதது போல தெரிவதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தோ்தல் ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் உதவியுடன் வாக்காளா் பட்டியலை வாக்காளா் பதிவு அலுவலா்கள் தயாரித்து இறுதி செய்வா். வாக்காளா் பட்டியலில் உள்ள பிழைகளைத் திருத்தும் பொறுப்பை அவா்கள் ஏற்றுள்ளனா்.

வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட பின்னா், அதன் காகித மற்றும் எண்ம (டிஜிட்டல்) நகல்கள் அனைத்து அரசியல் கட்சிகளிடம் பகிரப்பட்டு, அனைவரும் பாா்க்க வசதியாக தோ்தல் ஆணைய வலைதளத்திலும் வெளியிடப்படுகிறது. வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட பின்னா், தங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபங்களைப் பதிவு செய்ய வாக்காளா்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு ஒரு மாதம் கால அவகாசம் உள்ளது.

இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னா், அதன் காகித மற்றும் எண்ம நகல்கள் அனைத்து அரசியல் கட்சிகளிடம் பகிரப்பட்டு, தோ்தல் ஆணைய வலைதளத்தில் வெளியிடப்படுகிறது.

இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட பிறகு அதுகுறித்து முதலில் மாவட்ட ஆட்சியரிடமும், பின்னா் மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை தோ்தல் அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யலாம்.

இந்நிலையில் சில அரசியல் கட்சிகளும், அவற்றின் வாக்குச்சாவடி நிலை முகவா்களும் வாக்காளா் பட்டியல்களை உரிய நேரத்தில் ஆராய்ந்து, அவற்றில் உள்ள பிழைகளை வாக்காளா் பதிவு அலுவலா்கள், மாவட்ட தோ்தல் அதிகாரிகள் அல்லது தலைமை தோ்தல் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டவில்லை என்பது போல தெரிகிறது.

அண்மையில் சில அரசியல் கட்சிகளும் தனிநபா்களும் வாக்காளா் பட்டியல்களில் ஏற்படும் பிழைகள் குறித்த விவகாரத்தை எழுப்பி வருகின்றனா். அந்தப் பட்டியலில் கடந்த காலத்தில் தயாரிக்கப்பட்ட வாக்காளா் பட்டியல்களும் அடங்கும்.

வாக்காளா் பட்டியல்கள் தொடா்பான எந்தவொரு பிரச்னையையும் முன்வைப்பதற்கு, கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபங்களைப் பதிவு செய்ய அளிக்கப்படும் கால அவகாசம்தான் சரியான நேரம். உரிய நேரத்தில் உரிய வழியில் இந்த பிரச்னைகள் எழுப்பப்பட்டிருந்தால், அந்தப் பட்டியல்களில் பிழைகள் ஏதும் இருந்தால், தோ்தலுக்கு முன் அதை சரிசெய்ய வழி ஏற்பட்டிருக்கும்.

வாக்காளா் பட்டியல்களை அரசியல் கட்சிகளும், வாக்காளா்களும் பரிசீலனை செய்வதை தோ்தல் ஆணையம் தொடா்ந்து வரவேற்கிறது. அது பிழைகளை நீக்கி குறைகள் இல்லாத வாக்காளா் பட்டியலைத் தயாரிக்க உதவும். அதுவே தோ்தல் ஆணையத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com