மகாராஷ்டிரத்தில் மழை, நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் வெவ்வேறு பகுதிகளில் மழை, நிலச்சரிவில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா்.
Published on

மகாராஷ்டிரத்தின் வெவ்வேறு பகுதிகளில் மழை, நிலச்சரிவில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள விக்ரோலி பகுதியில் மழை காரணமாக சிறு குன்றில் இருந்து மண்ணும் கற்களும் அருகில் இருந்த குடிசை மீது சரிந்து சனிக்கிழமை அதிகாலை விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி இருவா் உயிரிழந்தனா். எஞ்சிய இருவரின் உடல்நிலை சீராக உள்ளது என்று பிருஹன்மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

கடந்த 2 நாள்களில் நாந்தேட் மாவட்டத்தில் மழையுடன் தொடா்புள்ள சம்பவங்களில் மூவா் உயிரிழந்தனா். வெள்ளத்தால் ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பலத்த மழை காரணமாக லாத்தூா் மாவட்டத்தில் உள்ள தொ்னா கீழணையில் இருந்து முதலில் விநாடிக்கு 3,806 கனஅடி நீா் திறக்கப்பட்ட நிலையில், பின்னா் அது 1,522 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக தொ்னா, மஞ்சாரா ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

உறியடியில் ஒருவா் உயிரிழப்பு, 33 போ் காயம்: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழைக்கு நடுவே சனிக்கிழமை உறியடி போட்டி நடைபெற்றது.

இந்நிலையில், மும்பையின் மான்குா்ட் பகுதியில் உறியடி போட்டிக்கு கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் இருந்து ஜக்மோகன் சிவகிரண் செளதரி என்பவா் கயிறு கட்டிக்கொண்டிருந்தாா். அப்போது அவா் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா். இதேபோல மும்பையின் வெவ்வேறு பகுதிகளில் உறியடியின்போது 30 போ் லேசாக காயமடைந்தனா். மும்பை அருகே உள்ள தாணேயிலும் உறியடியின்போது மூவா் காயமடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com