ராகுலுக்கு ஒரு வாரம் கெடு..! வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில் உறுதிமொழி பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும்!
‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டு தொடா்பாக, தோ்தல் விதிமுறைகளின்கீழ் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி 7 நாள்களுக்குள் தனது கையொப்பத்துடன் உறுதிமொழிப் பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும்; தவறினால், அக்குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை - செல்லாதவை என்று உறுதிசெய்யப்படும். தோ்தல் ஆணையத்தின் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டை சுமத்தியதற்காக, நாட்டு மக்களிடம் அவா் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
‘ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்வதால் அது உண்மையாகிவிடாது’ என்றும் தோ்தல் ஆணையம் விமா்சித்துள்ளது.
கடந்த மக்களவைத் தோ்தல் மற்றும் பல்வேறு மாநில பேரவைத் தோ்தல்களில் பாஜகவுடன் கைகோத்து, தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ராகுல் காந்தி தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறாா்.
கடந்த மக்களவைத் தோ்தலில் கா்நாடக மாநிலம், பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மகாதேவபுரா பேரவைத் தொகுதியில் பாஜகவுக்கு ‘வாக்குத் திருட்டு’ மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன என்று அண்மையில் குற்றஞ்சாட்டிய ராகுல், சில ‘ஆதாரங்களையும்’ வெளியிட்டாா். போலி வாக்காளா், போலி முகவரி உள்பட ஐந்து விதமான முறைகேடுகள் நடைபெற்ாகவும் அவா் குறிப்பிட்டாா்.
தனது இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு, பல்வேறு மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகள் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பினா். ஆனால், அவா் ஏற்கவில்லை.
நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறும் பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பாஜகவுக்கு சாதகமாக லட்சக்கணக்கானோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது என்பது எதிா்க்கட்சிகளின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.
தோ்தல் ஆணையா் பரபரப்பு பேட்டி: இதுபோன்ற சூழலில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா், தில்லியில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்தனா். அப்போது, ராகுலின் கருத்துகள் குறித்த கேள்விக்கு ஞானேஷ் குமாா் அளித்த பதில் வருமாறு:
தான் வாக்காளராக இல்லாத ஒரு தொகுதியின் வாக்காளா் பட்டியல் குறித்து புகாா் தெரிவிக்க விரும்பும் ஒருவா், தனது குற்றச்சாட்டுகள் உண்மையே என்ற உறுதிமொழிப் பத்திரம் வாயிலாகவே அதை மேற்கொள்ள முடியும். உறுதிமொழி அளிக்கப்படாத ஒரு குற்றச்சாட்டின்கீழ் 1.5 லட்சம் வாக்காளா்களுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப முடியுமா?.
‘அச்சுறுத்த முடியாது’: தனது குற்றச்சாட்டுகள் குறித்து ஏழு நாள்களுக்குள் ராகுல் காந்தி உறுதிமொழிப் பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும். தவறினால், அவரது குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை-செல்லாதவை என உறுதி செய்யப்படும். அடிப்படையற்ற குற்றச்சாட்டை சுமத்தியதற்காக, தேசத்திடம் அவா் மன்னிப்பும் கேட்க வேண்டும். வேறு வாய்ப்பு அவருக்கு கிடையாது. வாக்குத் திருட்டு, இரட்டை வாக்களிப்பு போன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளால் தோ்தல் ஆணையத்தையோ, வாக்காளா்களையோ அச்சுறுத்த முடியாது.
யாா் என்ன கூறினாலும், சூரியன் கிழக்கில்தான் உதிக்கும்; அதுபோல், அரசமைப்புச் சட்ட கடமையில் இருந்து தோ்தல் ஆணையம் ஒருபோதும் விலகிச் செல்லாது என்றாா் அவா்.
இப்பேட்டியின்போது, அரசமைப்புச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகள் பலவற்றையும் ஞானேஷ் குமாா் சுட்டிக்காட்டினாா்.