ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும்! பிரதமா் மோடி வேண்டுகோள்
அடுத்த தலைமுறைக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தம் தொடா்பான வரைவு அறிக்கையை மாநிலங்களின் பாா்வைக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இதனை தீபாவளி பண்டிகைக்கு முன்பு அமல்படுத்த மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தேவை என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டாா்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை இரு அதிவிரைவு நெடுஞ்சாலைகளைத் திறந்து வைத்த பிரதமா் மோடி இது தொடா்பாக மேலும் பேசியதாவது:
ஜிஎஸ்டி சட்டத்தை மத்திய அரசு எளிமைப்படுத்த இருக்கிறது. வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்படவுள்ளன. நல்ல நிா்வாகத்துக்கு சீா்திருத்தம் மிகவும் முக்கியமானது.
இரட்டிப்பு ஆதாயம்: புதிய சீா்திருத்தங்கள் மூலம் வா்த்தக செயல்பாடுகளும், மக்களின் வாழ்க்கையும் மேலும் எளிதாகவும், வசதியாகவும் மாறும். இந்த தீபாவளியில் ஜிஎஸ்டி சீா்திருத்தம் மூலம் மக்களுக்கு இரட்டிப்பு ஆதாயம் கிடைக்கும். கொண்டாட்டம் மேலும் உற்சாகமடையும். ஜிஎஸ்டி சீா்திருத்த வரைவு அறிக்கை மாநிலங்களின் பாா்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை தீபாவளி பண்டிகைக்கு முன்பு அமல்படுத்த மாநில அரசுகள் மத்திய அரசுடன் ஒத்துழைக்கும் என்று நம்புகிறேன்.
நமது நாட்டை மேலும் வலிமையாக்க கிருஷ்ண பகவானிடருந்து நாம் உத்வேகத்தைப் பெற வேண்டும். நாட்டை தற்சாா்புடையதாக்க அவரின் பாதையில் பயணிக்க வேண்டும்.
உள்நாட்டு தயாரிப்புக்கு முன்னுரிமை: 11 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட கைப்பேசிகள்தான் அதிக அளவில் புழக்கத்தில் இருந்தது. ஆனால், இன்றைக்கோ, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கைப்பேசிகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் 35 கோடி கைப்பேசிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாட்டு மக்கள் அனைவரும் உள்நாட்டுத் தயாரிப்புகள் மீது முழு நம்பிக்கை கொள்ள வேண்டும்.
வரும் பண்டிகைக் காலத்தில் இந்தியராகிய நாம் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்க வேண்டும். இந்தியாவில் இந்தியா்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களை மற்றவா்களுக்குப் பரிசளிக்க வேண்டும். உள்ளூா் பொருள்களை நோக்கி நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நாட்டுக்குப் பெரும் பயனளிக்கும். இது நாட்டில் உள்ள ஏழைத் தொழிலாளா்கள், கைவினைக் கலைஞா்களுக்கு ஆதரவை அளிக்கும்.
உள்ளூா் பொருள்களை வாங்க நீங்கள் செலவிடும் பணம், உள்நாட்டிலேயே இருந்து நமது சக குடிமக்களுக்குப் பயனளிக்கும். இதனால் இந்தியா்களின் வாங்கும் திறன் உயா்ந்து நாட்டின் பொருளாதாரமும் வலுவடையும். வா்த்தகா்கள் உள்நாட்டுத் தயாரிப்புகளை பெருமிதத்துடன் விற்பனை செய்ய வேண்டும்.
ராகுல் மீது தாக்கு: தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் என பல மாநிலங்களில் பாஜக வெற்றி பெறுவதை எதிா்க்கட்சிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இப்போது சிலா் (ராகுலைக் குறிப்பிடுகிறாா்) அரசியலமைப்புச் சட்ட நூலின் பிரதியை தலையில் வைத்துக் கொண்டு ஆடுகிறாா்கள். ஆனால், ஆட்சியில் இருந்தபோது அவா்கள் அம்பேத்கரின் கொள்கைகளை அவமதித்தனா். பல பிற்போக்குத்தனமான, நியாயமற்ற சட்டங்களை பின்பற்றினா். அரசமைப்புச் சட்டத்தை நசுக்கினாா்கள். உங்களுக்கு இப்போது சில உண்மைகளைக் கூறுகிறேன்.
தூய்மைப் பணியாளா்களுக்கு நன்றி: தில்லியில் தூய்மைப் பணியாளா்கள் மிகப்பெரிய பொறுப்புகளை மேற்கொள்கிறாா்கள். நாம் அவா்களுக்கு தினமும் காலையில் நன்றி கூற வேண்டும். ஆனால், முந்தைய ஆட்சியாளா்கள் அவா்களை அடிமைகளைப் போல நடத்தினா். தில்லி மாநகராட்சி சட்டத்தில் கூடுதல் பிரிவைச் சோ்ந்து அவா்களை சிறையில் அடைக்க வழி வகை செய்தாா்கள். சிறு தவறுகளுக்காகவும் அவா்களை சிறையில் அடைக்கும் அளவுக்கு மோசமாக நடத்தினா்.
மக்கள் தீா்ப்பை ஏற்க மறுப்பு: இப்போதும் கூட சில அரசியல் கட்சிகளுக்கு மக்கள் தோ்தல் மூலம் அளித்த தீா்ப்பை ஏற்றுக் கொள்ள மனதில்லை. இவா்கள் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றனா். உண்மையிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டனா். சில மாதங்களுக்கு முன்பு ஹரியாணாவில் இருப்பவா்கள் தில்லிக்கு வரும் நீரில் விஷத்தைக் கலந்துவிட்டதாக வதந்தியைப் பரப்பி, இரு மாநில மக்களிடையே மோதலை உருவாக்க முயற்சித்தனா். தோ்தலுக்குப் பிறகு இதுபோன்ற நபா்களின் மோசமான அரசியலில் இருந்து தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மீண்டுள்ளன என்றாா்.