அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

அரசியலமைப்பை நசுக்கியவர்களே தற்போது, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர் என காங்கிரஸ் கட்சியை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடிPTI
Published on
Updated on
2 min read

அரசியலமைப்பை நசுக்கியவர்களே தற்போது அதனை பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர் என காங்கிரஸ் கட்சியை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

தலைநகர் தில்லியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கத்திலும் ரூ. 11,000 கோடி மதிப்புடைய இரு வேறு சாலைத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆக. 17) தொடக்கி வைத்தார்.

சாலைத் திட்டங்களை தொடக்கி வைத்த பிரதமர்
சாலைத் திட்டங்களை தொடக்கி வைத்த பிரதமர்PTI

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

''சிலர் அரசியலமைப்பைக் காப்பதைப் போன்று நடிக்கின்றனர். ஆட்சியில் இருக்கும்போது அரசியலமைப்பை நசுக்கியவர்களும் அவர்கள்தான். தூய்மைப் பணியாளர்கள் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? தூய்மைப் பணியாளர்கள் வேலைக்குச் செல்லவில்லை என்றால், அவர்களை சிறையில் அடைக்கும் சட்டம் இருந்தது. ஆனால், அத்தகைய சட்டங்களை அப்புறப்படுத்தியது நமது அரசு.

வளர்ச்சியடைந்த இந்தியாவின் தலைநகரில் இருப்பதை மக்கள் உணர்வதைப் போன்று தில்லியின் வளர்ச்சி இருக்க வேண்டும். நாட்டின் சிறந்த நகரமாக தில்லியை மாற்றுவேன் என்ற உறுதிமொழியை இங்கு உங்கள் முன்பு எடுத்துக்கொள்கிறேன்.

நகர்ப்புற சாலை விரிவாக்கமானது தலைநகருக்குள் குப்பை தேங்குவதை குறைக்கும். ரேகா குப்தா தலைமையிலான ஆட்சியில் யமுனை நதியை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பசுமை தில்லியின் கனவை நனவாக்கும் வகையில் மின்சாரப் பேருந்துகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தில்லி மற்றும் அதனையொட்டியுள்ள நகரங்களில் ஏராளமான விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் சாதனை புரியும் அளவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தில்லியில் கடந்தமுறை இருந்த ஆட்சியில், உள்கட்டமைப்பு மேம்பாட்டின் வளர்ச்சி வேகமாக இல்லை. தில்லி தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கிடப்பில் இருந்தன. ஆனால், எங்களுக்கு வாய்ப்பு கிடைத்த பிறகு அவை முழுமை அடைந்துள்ளன. கடந்த 11 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான நிதி 6 மடங்கு அதிகரித்துள்ளது.

முன்பு, தில்லி படுகுழியில் இருந்தது. தில்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைந்திருந்தது. மக்களிடமிருந்து எத்தகைய ஆசி பாஜகவுக்கு கிடைத்துள்ளது என்பதை இது காட்டுகிறது. சில அரசியல் கட்சிகளால் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை. ஹரியாணா மக்கள் தில்லிக்கான நீரில் விஷத்தை கலப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

ஜிஎஸ்டியானது அடுத்த தலைமுறை சீர்திருத்தத்திற்குட்படுத்தப்பட்டுள்ளது. சீர்திருத்தம் என்றால், நல்லாட்சியின் விரிவாக்கம் என்பதே எங்களுடைய பொருள். ஜிஎஸ்டி திருத்தத்தால், நாட்டு மக்களுக்கு இந்த தீபாவளிக்கு இரட்டை போனஸ் கிடைக்கும்'' என மோடி பேசினார்.

இதையும் படிக்க | தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி தாய்க்கு பாலியல் வன்கொடுமை: மகன் கைது!

Summary

Once crushed constitution, now dancing with it: PM Modi slams opposition

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com