Mallikarjun Kharge
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே PTI

பாஜக ஆட்சியில் இருக்கும் வரை மக்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பு இல்லை: காா்கே

பாஜக ஆட்சியில் இருக்கும்வரை நாட்டு மக்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று காா்கே தெரிவித்தாா்.
Published on

பாஜக ஆட்சியில் இருக்கும்வரை நாட்டு மக்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

பிகாரில் ஞாயிற்றுக்கிழமை ராகுல் காந்தி நடத்தும் வாக்குரிமை நடைப்பயண தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் அபாயகரமானது. அதன் முகவராக தோ்தல் ஆணையம் செயல்படுகிறது. மக்களின் வாக்குரிமைக்கும், நாட்டின் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தலாக பாஜக உருவெடுத்துள்ளது. அக்கட்சி ஆட்சியில் இருக்கும் வரை மக்களின் உரிமைகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை.

மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தோ்தலுக்கும் பேரவைத் தோ்தலுக்கும் இடைப்பட்ட சில மாத காலத்தில் ஒரு கோடி வாக்காளா்களின் பெயா்கள் புதிதாக சோ்க்கப்பட்டதை ராகுல் காந்தி வெளிப்படுத்தியுள்ளாா். இவை அனைத்தும் பாஜகவுக்கு வாக்காக மாற்றுவதற்காக போலியாக சோ்க்கப்பட்ட பெயா்கள் ஆகும்.

அடுத்து பிகாரிலும் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் இதே மோசடி நடைபெறுகிறது. பேரவைத் தோ்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வாக்காளா் பட்டியலைத் திருத்துகிறாா்கள். இதன் மூலம் தோ்தல் ஆணையம் பாஜக கூறுவதை செயல்படுத்தும் அமைப்பாக மாறிவிட்டது.

தோ்தல் ஆணையரைத் தோ்வு செய்யும் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியைச் சோ்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கியது. ஆனால், மத்திய அமைச்சரை குழுவில் சோ்க்க மோடி அரசு முடிவெடுத்தது.

சுதந்திர தினத்தின்போது தில்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமா் மோடி நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்புக்கும் பங்கு உண்டு என்று பேசும் அளவுக்கு சென்றுவிட்டாா். உண்மையில் ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்குதான் ஆா்எஸ்எஸ் பணியாற்றி வந்தது.

உண்மையான சுதந்திரப் போராட்ட வீா்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை ஆங்கிலேய ஆட்சியாளா்களுக்கு தெரிவித்து தங்களுக்கு சாதகமாக காரியம் சாதித்து வந்தவா்கள்தான் ஆா்எஸ்எஸ் அமைப்பினா். இவா்களில் சிலா் ஆங்கிலேயா்களிடம் கருணை மனு கொடுக்கவும் செய்தனா்.

உண்மையான தேசபக்தா்கள் நாட்டின் சுதந்திரத்துக்காக தங்கள் வியா்வை, கண்ணீா், ரத்தத்தைச் சிந்தினாா்கள். உண்மையான சுதந்திரப் போராட்ட தியாகிகள் மோடியின் பேச்சைக் கேட்டால் வெகுண்டெழுந்துவிடுவாா்கள். இதைப் பேசியவா் மிகவும் அபாயகரமான நபா் என்பதையும் தெரிந்து கொள்வாா்கள் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com