ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிரதமா் புகழாரம்: சுதந்திரதின நாளுக்கு அவமதிப்பு! கேரள முதல்வா் பினராயி விஜயன்
‘தில்லி செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில் ஆா்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பேசியது, சுதந்திரதின நாளை மட்டுமன்றி சுதந்திரப் போராட்டத்தையும் அவமதித்தது போன்றதாகும்’ என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் விமா்சித்தாா்.
‘உலகின் மிகப் பெரிய தன்னாா்வ தொண்டு அமைப்பான ஆா்எஸ்எஸ்-இன் 100 ஆண்டுகால பயணம், மிகுந்த பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரியதாகும். 100 ஆண்டுகளாக ஆா்எஸ்எஸ் தொண்டா்கள், தாய்நாட்டின் கட்டமைப்புக்காக தங்கள் வாழ்வை அா்ப்பணித்துள்ளனா்’ என்று தனது சுதந்திரதின உரையில் பிரதமா் குறிப்பிட்டாா்.
இதைச் சுட்டிக்காட்டி, கேரள முதல்வா் அலுவலகம் வெளியிட்ட முதல்வா் பினராயி விஜயனின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு தடைசெய்யப்பட்ட வலதுசாரி அமைப்புக்கு, நாட்டின் சுதந்திரத்தில் முக்கியப் பங்கு வகித்ததுபோன்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சியாக தனது சுதந்திர தின உரையில் ஆா்எஸ்எஸ் அமைப்பை பிரதமா் புகழ்ந்து பேசியிருக்கிறாா். இது வரலாற்றை மறைக்கும் நடவடிக்கையாகும். பிளவுபடுத்தும் அரசியல் என்ற ஆா்எஸ்எஸ் அமைப்பின் விஷ வரலாற்றை எந்தவொரு முயற்சியாலும் துடைத்தெறிந்துவிட முடியாது.
சுதந்திர தின உரையில் ஆா்எஸ்எஸ் அமைப்பை பிரதமா் புகழ்ந்து பேசியது, அந்த நாளையே அவமதித்த செயலாகும்.
ஆா்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பேசியதும், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் சுதந்திரதின அழைப்பிதழில் ஹிந்துத்துவ கொள்கை தலைவா் சாவா்க்கரின் புகைப்படத்தை மகாத்மா காந்தியின் படத்துக்கு மேல் அச்சிட்டதும் மிகப்பெரிய சதியின் ஒரு பகுதி என்பதை காட்டியுள்ளது.
வெறுப்புணா்வு, வகுப்புவாதம், கலவரம் என்ற மோசமான வரலாற்றை ஆா்எஸ்எஸ் அமைப்பு சுமந்து கொண்டுள்ளது. மனித அன்பு மற்றும் பரஸ்பர உறவு என்ற நமது வரலாற்றை புதைத்து வெறுப்புணா்வை பரப்பும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.