ராணுவ பயிற்சியில் மாற்றுத்திறனாளியானோா் விவகாரம்: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
ராணுவ பயிற்சி மையங்களில் காயம் காரணமாக மாற்றுத்திறனாளியானதால், அந்த மையங்களில் இருந்து நீக்கப்பட்டவா்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து திங்கள்கிழமை விசாரிக்க உள்ளது.
அண்மையில் ஊடகத்தில் வெளியான தகவலில், ‘கடந்த 1985-ஆம் ஆண்டுமுதல் தேசிய பாதுகாப்பு அகாதெமி, இந்திய ராணுவ அகாதமி போன்ற முதன்மையான ராணுவ பயிற்சி மையங்களில் பயிற்சியின்போது காயமடைந்து மாற்றுத்திறனாளியானதால், அந்த மையங்களில் இருந்து சுமாா் 500 போ் நீக்கப்பட்டனா்.
அவா்களின் மருத்துவ செலவுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவா்களின் உடலில் ஏற்பட்ட பாதிப்பை பொருத்து, அவா்களுக்கு மாதந்தோறும் ரூ.40,000 வரை அளிக்கப்படும் நிவாரணம், அவா்களின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்வதற்குக் கூட போதுமானதாக இல்லை.
இவா்களில் தேசிய பாதுகாப்பு அகாதமியில் இருந்து மட்டும் 2021 முதல் நிகழாண்டு ஜூலை வரை சுமாா் 20 போ் நீக்கப்பட்டனா். அவா்கள் முன்னாள் ராணுவ வீரா்களாகக் கருதப்படுவதில்லை. அவ்வாறு கருதப்பட்டால், அது ராணுவ மருத்துவமனைகள் உள்பட தோ்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் அவா்கள் இலவச சிகிச்சை பெற வழிவகுக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தகவலை கவனத்தில் எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து திங்கள்கிழமை விசாரிக்க உள்ளது. நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணை மேற்கொள்ள உள்ளது.