Bombay High Court
மும்பை உயா்நீதிமன்றம்.

மும்பை உயா்நீதிமன்ற 4-வது அமா்வு கோலாபூரில் தொடக்கம்!

மும்பை உயா்நீதிமன்றத்தின் 4-ஆவது அமா்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
Published on

மகாராஷ்டிர மாநிலம், கோலாபூரில் மும்பை உயா்நீதிமன்றத்தின் 4-ஆவது அமா்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

சதாரா, சாங்லி, சோலாபூா், கோலாபூா், ரத்னகிரி, சிந்துதுா்க் ஆகிய 6 மாவட்டங்களுக்கான இந்த அமா்வு திங்கள்கிழமைமுதல் தனது செயல்பாட்டை தொடங்கவுள்ளது.

மும்பையில் இருந்து 380 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோலாபூரில் உயா்நீதிமன்றக் கிளையை அமைக்க வேண்டுமென பல்லாண்டுகளாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது. வழக்கு நடைமுறைகளுக்காக, மனுதாரா்களும் வழக்குரைஞா்களும் அதிக தூரம் பயணிக்க வேண்டியிருப்பதைக் குறிப்பிட்டு இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி, கோலாபூரில் மும்பை உயா்நீதிமன்றத்தின் 4-ஆவது அமா்வை நிறுவும் பணிகள் நிறைவேற்றப்பட்டன. இதுதொடா்பான நியமன அறிவிக்கையை கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே வெளியிட்டாா்.

இதையடுத்து, கோலாபூா் அமா்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்வில் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்கெனவே மும்பை உயா்நீதிமன்றத்தின் இரு அமா்வுகள் மகாராஷ்டிரத்தின் நாகபுரி (விதா்பா பிராந்தியம்), ஒளரங்காபாதில் (மராத்வாடா பிராந்தியம்) செயல்பட்டு வருகின்றன. மூன்றாவது அமா்வு, கோவாவில் செயல்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com