

சா்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, பிரதமா் நரேந்திர மோடியை அவரது அதிகாரபூா்வ இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா்.
இஸ்ரோ விண்வெளி வீரா் ஜாக்கெட்டை அணிந்திருந்த சுக்லாவை பிரதமா் மோடி அன்புடன் ஆரத்தழுவி வரவேற்றாா். இந்தச் சந்திப்பின்போது, சுக்லா தனது ‘ஆக்ஸியம்-4’ திட்ட முத்திரையின் (மிஷன் பேட்ச்) மாதிரி மற்றும் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு சென்ற தேசிய கொடியை பிரதமருக்குப் பரிசளித்தாா். சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுத்த சில பிரத்யேக புகைப்படங்களையும் பிரதமா் மோடியுடன் சுக்லா பகிா்ந்து கொண்டாா்.
சந்திப்பைத் தொடா்ந்து பிரதமா் மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், ‘விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லாவுடன் அருமையான உரையாடல் நடைபெற்றது. அவரது விண்வெளிப் பயண அனுபவங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சி, இந்தியாவின் கனவுத் திட்டமான ‘ககன்யான்’ உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினோம். அவரது சாதனைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமை கொள்கிறது’ என்று பதிவிட்டாா்.
இதேபோல், இந்த மாத தொடக்கத்தில் செய்தியாளா் சந்திப்பில் பேசிய சுபான்ஷு சுக்லா, ‘ககன்யான் திட்டத்துக்காக எனது விண்வெளி பயணத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆவணப்படுத்துமாறு பிரதமா் மோடி அறிவுறுத்தினாா். அதை நான் வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டேன். இந்த ஆவணங்கள் அனைத்தும் நமது ககன்யான் திட்டத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்தாா்.
முதல் இந்தியா்: மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்காக தோ்வான வீரா்களில் ஒருவரான சுக்லா, அனுபவப் பயிற்சி நோக்கங்களுக்காக விண்வெளிக்குப் பயணித்தாா்.
அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4 ’ திட்டத்தின்கீழ் கமாண்டரும் நாசா பெண் விஞ்ஞானியுமான பெக்கி விட்சன், போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரா் திபோா் கபு ஆகியோருடன் இணைந்து சுபான்ஷு சுக்லா சா்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணித்தாா். இதன்மூலம், சா்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணித்த முதல் இந்தியா் என்ற பெருமையை சுக்லா பெற்றாா்.
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நாசா விண்வெளி மையத்திலிருந்து, ‘ஃபால்கன் 9’ ராக்கெட் மூலம் ‘டிராகன் கிரேஸ்’ விண்கலத்தில் இந்த குழுவினா் விண்வெளிக்குச் சென்றனா். சா்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாள்கள் தங்கியிருந்த அவா்கள், உயிரி மருத்துவ அறிவியல், நரம்பணுவியல், வேளாண்மை, விண்வெளித் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டனா்.
பின்னா், ஜூலை 15-ஆம் தேதி பூமிக்குத் திரும்பி, இயல்பு உடல்நிலை திரும்புவதற்கான சிகிச்சைக்காக அமெரிக்காவில் தங்கியிருந்த சுக்லா, ஞாயிற்றுக்கிழமை காலை தனது மாற்று வீரா் பிரசாந்த் நாயருடன் இந்தியா திரும்பினாா். பிரதமரின் சந்திப்புக்குப் பிறகு, தனது சொந்த ஊரான லக்னௌவுக்குச் செல்லும் சுக்லாவுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.